7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்!

public

மத்திய அரசு மற்றும் விவசாயிகள் இடையேயான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

டெல்லியில் உறைய வைக்கும் பனியையும் பொருட்படுத்தாமல், பல்வேறு மாநிலங்களிலிருந்து சென்றுள்ள விவசாயிகள், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரித் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு ஏற்கனவே நடத்திய 6 கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மதியம் 2 மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை 4 மணி நேரம் நீடித்தது. விவசாயச் சங்க பிரதிநிதிகளுடன் நடந்த இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த, பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த யுது வீர்சிங் கூறுகையில், சட்ட விதிகள் வாரியாக விவாதிக்க வேண்டும் என்று விவசாயத் துறை அமைச்சர் தெரிவித்தார். அதை நாங்கள் நிராகரித்து சட்டரீதியாக விவாதிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்று கூறினோம். ஏனென்றால் நாங்கள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறுகிறோம். ஆனால் அரசு அதில் திருத்தம் செய்யும் நோக்கில் செயல்படுகிறது. இதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், சட்டத்தின் அம்சங்களை விவாதிக்க நாங்கள் விரும்பிய போதும் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. 7ஆவது கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. விவசாயச் சங்கங்கள் பிடிவாதமாக உள்ளனர் என்று கூறினார்.

முன்னதாக 2 மணிக்குப் பேச்சுவார்த்தை தொடங்கியபோது போராட்டக்களத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக, மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர், சோம் பிரகாஷ் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து இடைவெளியின்போது விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவை அருந்தினர். கடந்த முறை பேச்சுவார்த்தையின்போது, விவசாயிகளின் உணவு பந்தியில் அமைச்சர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டு உணவை உட்கொண்டனர். இம்முறை விவசாயிகள் சாப்பிடச் சென்றபோது அமைச்சர்கள் தனியாக அதிகாரிகளுடன் கூட்ட அரங்கில் ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7ஆம் கட்ட பேச்சு வார்த்தையிலும், முடிவு எட்டப்படாத நிலையில் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் ஜனவரி 8ஆம் தேதி நடைபெறும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதனிடையே பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன், போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மறைமுகமாக அரசு பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுக்குச் சாதகமாக உள்ள விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதாகவும், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இந்த அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் கையெழுத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனினும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டத்தை கைவிடுவதில்லை என திட்டவட்டமாக உள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படாமல் 40 நாட்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது.

**-பிரியா**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *