நாளை பள்ளிகள் திறப்பு: முன்னெச்சரிக்கைகள், குறைக்கப்பட்ட பாடங்கள்!

public

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்காக நாளை (ஜனவரி 19) பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்து அரசு வழிகாட்டு நெறிமுறைகளாகவும் வெளியிட்டது. மேலும் மாணவர்களுக்குக் குறைக்கப்பட்ட பாடங்கள் எவை என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பள்ளிகள் கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பதை கருத்தில்கொண்டு அவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது பற்றி கல்வித் துறை ஆலோசித்து வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 6, 7 மற்றும் 8ஆம் தேதிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோரிடம் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளைத் திறக்க ஆதரவு தெரிவித்து கூறியிருந்த கருத்துகளின்படி நாளை (ஜனவரி 19) முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்து ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், முன்னேற்பாடுகள் குறித்தும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளாகவும் வெளியிட்டது.

அந்த வகையில் பள்ளிக்கு மாணவர்கள் வருகையைக் கட்டாயப்படுத்த கூடாது. விருப்பத்தின்பேரில் பெற்றோரின் இசைவு கடிதம் பெற்று மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் ஆகியவற்றை எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு தெரிவித்து இருந்தது. இதை கண்காணிக்க கல்வித் துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று (ஜனவரி 18) ஆய்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக போதிய அவகாசம் இல்லாததால் ஒன்று முதல் ஒன்பது வரையிலான வகுப்புகளுக்கு 50 சதவிகிதமும், 10 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு 35 சதவிகிதமும் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது.

இதனால் குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் இருந்தனர். இதற்கிடையே கல்வித் துறை அறிவித்த குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் எவை, எவை என்பது அடங்கிய விவரங்களை நேற்று முன்தினம் இரவு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) அனுப்பி இருக்கிறது. முதன்மை கல்வி அதிகாரிகள் அதை மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி, அவர்கள் மூலம் அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கின்றனர்.

அதன்படி, 10ஆம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் எந்தெந்த பாடங்கள் குறைக்கப்பட்டு இருக்கின்றன, அதேபோல், 12ஆம் வகுப்பில் வணிகவியல், கணக்கு பதிவியல், கணிதம், உயிரியல், பொருளாதாரம், வேதியியல், ஆங்கிலம், வரலாறு, இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்பட பிற பாடப்பிரிவுகளுக்கும் என்னென்ன பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்ற மொத்த விவரங்கள் ‘பி.டி.எஃப்’ வடிவில் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘தேவையான பாடங்களுக்கு முதலில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பின்னர் நேரம் இருந்தால் மீதமுள்ள பாடங்களை நடத்திக்கொள்ளலாம். அதேபோல், போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அந்தந்தப் பாடத்திட்டங்களின் அடிப்படையில் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பாடத்திட்டங்களிலும் இருந்து கல்வித் துறை அறிவித்தபடி சுமார் 30 முதல் 40 சதவிகிதம் வரையில் பாடங்கள் குறைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு குறைக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருக்கும் இந்தப் பாடத் திட்டங்களைக்கொண்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நாளை (ஜனவரி 19) முதல் பாடங்களை நடத்த இருக்கின்றனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *