மின்னம்பலம்
தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கிய இடம்பிடிப்பது அசைவ உணவுகள். இன்றைக்கும்கூட விருந்து என்றால் மட்டன் இல்லாமல் நடப்பதில்லை. புரதச்சத்து அதிகளவு கொண்ட மட்டன், ருசிக்கு மட்டுமல்ல; உடல் பலத்துக்கும் ஏற்றது. அத்தகைய மட்டனில் வித்தியாசமான ‘மட்டன் 65’ செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
என்ன தேவை?
போன்லெஸ் மட்டன் - 250 கிராம்
கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன்
சோள மாவு - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது - 3 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன்
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் - முக்கால் டீஸ்பூன்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன் (அல்லது) வினிகர் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்).
கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் தயாரிக்கவும் (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், ஆறிய மட்டன் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டில் தோய்த்து எடுத்து, பொரித்து எடுக்கவும். மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும்வரை பொரித்தால் போதும். வெங்காய ஸ்லைஸ்/லெமன் ஸ்லைஸ்களுடன் பரிமாறவும்.
குறிப்பு
நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.
அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில்கொள்ளவும்.