மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 2 ஏப் 2021

சென்னை சிறப்புப் பேருந்துகள்- 30 சதவிகிதம் முன்பதிவு

சென்னை சிறப்புப் பேருந்துகள்- 30 சதவிகிதம் முன்பதிவு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க வசதியாக நேற்று (ஏப்ரல் 1) முதல் வருகிற 5ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்ய இதுவரை 30 சதவிகிதம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர விழிப்புணர்வு செய்து வருகிறது, இதன் காரணமாக, தினசரி வழக்கமாக இயக்கப்படும் 11,125 பேருந்துகளுடன் கூடுதலாக 3,090 சிறப்புப் பேருந்துகள் என சென்னையில் இருந்து மொத்தம் 14,215 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதேபோல் கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து 2,644 சிறப்புப் பேருந்துகளும் நேற்று முதல் வருகிற 5ஆம் தேதி வரை இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

அதன்படி சென்னையில் இருந்து நேற்று (ஏப்ரல் 1) முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. முதல் நாளான நேற்று 625 சிறப்புப் பேருந்துகளுடன், வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளும் சேர்த்து மொத்தம் 2,920 பேருந்துகள் இயக்கப்பட்டன.

இன்று (ஏப்ரல் 2) 360 சிறப்புப் பேருந்துகளுடன் சேர்த்து 2,585 பேருந்துகளும், 3ஆம் தேதி 545 சிறப்புப் பேருந்துகளுடன் சேர்த்து 2,770 பேருந்துகளும், 4ஆம் தேதி 200 சிறப்புப் பேருந்துகளுடன் சேர்த்து 2,425 பேருந்துகளும், 5ஆம் தேதி 1,290 சிறப்புப் பேருந்துகளுடன் சேர்த்து மொத்தம் 3,515 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

வருகிற 4, 5ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களும் பொதுமக்கள் வசதிக்காக பண்டிகை காலம்போல் கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையம், கே.கே நகர் மாநகரப் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (மெப்ஸ்), பூந்தமல்லி பேருந்து நிலையம் ஆகிய ஆறு இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

இன்று (ஏப்ரல் 2) புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாகும். இதையடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை நாட்கள் என்பதால் இன்று மாலை முதல் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு கிளம்பி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6ஆம் தேதி தேர்தல் நாளன்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. எனினும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 30 சதவிகிதம் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி ஒருவர், “நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2,225 பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகள் சேர்த்து மொத்தம் 2,920 பேருந்துகள் இயக்கப்பட்டன. வருகிற 5ஆம் தேதி வரை பல்வேறு ஊர்களுக்குப் பயணம் செய்ய இதுவரை 30 சதவிகிதம் பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். இது குறைவான எண்ணிக்கையாகும்.

பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் , சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதும் பயணிகளின் குறைவான முன்பதிவுக்கு காரணமாக இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 2 ஏப் 2021