மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்? ராமேஸ்வரம் கோயில் பஞ்சாங்கத்தின் கணிப்பு!

தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் சென்னையைப் புயல் தாக்கும் என்றும், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார் என்பது குறித்தும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

ராமேஸ்வரம் கோயிலில் ஆண்டு தோறும் தமிழ்ப் புத்தாண்டு அன்று கோயிலின் சோமாஸ்கந்தர் சந்நிதிக்கு முன்பாக பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் புத்தாண்டு அன்று பகல் 12 மணி அளவில் கோயிலின் சோமாஸ்கந்தர் சந்நிதி முன்பாக பஞ்சாங்கம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பஞ்சாங்கத்தை கோயிலின் சர்வசாதகம் சிவமணி வாசித்தார். அப்போது வாசிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் இடம்பெற்ற தகவல்கள் இவை...

இந்தியாவுக்கு வடகிழக்கில் உள்ள நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா, மங்கோலியா, பர்மா போன்ற நாடுகளில் இருந்து புதிய வகை வைரஸ் காய்ச்சல் நோய் அதிகமாக பரவும். விளையாட்டு வீரர்களுக்கு விபத்து நடைபெறும்.

தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களின் விலை ஏற்றம், இறக்கமாக சரிவை சந்திக்கும். உலகில் பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். பணம் கையிருப்பு என்பது குறைந்து எல்லாவற்றிலும் ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிக்கும்.

புதிய வைரஸ் நோய் தொற்று நோயாக பரவி வர நேரும். இதனால் உலகத்தை ஆட்டிப்படைக்கும். உலகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலை உருவாகும். மூலிகை மருத்துவம் மூலம் தான் புதிய வைரஸ் நோயை அழிக்க முடியும்.

எண்ணெய் வித்துக்கள், எள், கடுகு, உளுந்து போன்ற பொருட்களின் விலை உயரும். கல்விக் கட்டணமும் உயரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்களின் மென் பொருள் விலை அதிகரிக்கும்.

விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். காபி, ஏலக்காய், மிளகு போன்ற மலைப்பகுதியில் விளையும் பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவற்றின் விளைச்சல் அதிகமாக இருக்கும். நல்ல வியாபாரமும் இருக்கும். தேனீ, வண்டு, வவ்வால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகளால் பயிர் விளைச்சலுக்கு சேதம் ஏற்படக்கூடும்.

புகழ் பெற்ற பழைய கட்சியே ஆட்சியைப் பிடிக்க நேரிடும். பழைய கட்சிகளுக்கு ராஜயோகம் காத்திருக்கிறது.

இந்த ஆண்டு வரலாறு காணாத மழை பொழியும். இந்த ஆண்டு சென்னையைப் புயல் பலமாக தாக்கும். இதனால் சென்னை தத்தளிக்கும். இந்த ஆண்டு கடுமையான மழையால் சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, இலங்கை கச்சத் தீவு போன்ற இடங்கள் கடுமையாக பாதிக்கும்.

அயல்நாடான பாகிஸ்தான் மூன்று நாடுகளாகப் பிரிய நேரும். நேபாளத்தை இந்தியாவுடன் இணைக்க நேரும். சீனா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில்தான் முடியும். அண்டை நாடான பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் மீது சண்டை போட நேரம் பார்த்துக் கொண்டே இருக்கும். விவசாய உபகரணங்களின் விலை கடுமையாக உயரும். ராக்கெட் ஏவுகணையைத் தயாரித்து இந்தியா வெற்றி அடையும்.

மருத்துவத்தில் பெரும் முயற்சி செய்து தொற்று நோய்க்கான மருந்தை இந்திய விஞ்ஞானி கண்டுபிடிப்பார்.

இவ்வாறு பஞ்சாங்கத்தில் தகவல்கள் இடம்பெற்று இருந்தன.

புத்தாண்டு தினத்தன்று பஞ்சாங்கம் படிப்பது ஏன்?

நம் முன்னோர்கள் காலத்தை முன் கணித்து அதற்கேற்ப வாழ்வை மாற்றிக்கொள்பவர்கள். அதனால்தான் ஓர் ஆண்டின் தொடக்கத்திலேயே பஞ்சாங்கத்தை வாசிக்கிறார்கள். ஊரில் இருக்கும் கோயில் அல்லது பஜனை மடம் ஆகிய பொது இடங்களில் அமர்ந்து அந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வாசிப்பார்கள்.

பஞ்சாங்கம் என்றால் ஐந்து அங்கங்கள். திதி, வாரம், கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய அம்சங்களைச் சொல்வது மட்டுமல்ல; அந்த ஆண்டு எப்படி அமையும் என்பதையும் கிரக நிலைகளைக்கொண்டு முன் கணித்துச் சொல்பவை. பெரும்பாலும் அவர்களின் கணிப்பு சரியாகவே இருக்கும்.

ஓர் ஆண்டில் மழை சுமாராக இருக்கும் என்றோ அல்லது அதிக மழை பெய்யும் என்றோ கணிக்கப்பட்டிருந்தால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும். மழை இருக்காது என்றால் இருப்பதைப் பாதுகாக்க வேண்டும். கனமழை பெய்யும் என்றால் ஏரி குளங்களைத் தூர்வார வேண்டும். நோய் பரவும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டால் நோயைத் தடுக்கும் விதமாக சுத்தமாக இருந்து நோயைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பஞ்சம் வரும் என்றால் மக்களுக்குத் தேவையான தானியங்களை சேமித்து வைப்பது, பகிர்ந்தளிப்பது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்படி ஊரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதற்படியாகவே பஞ்சாங்கம் படிப்பதை நம் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த ஆண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கு ஏற்பவே அந்த ஆண்டு ஊரில் வரி வசூல் இருக்கும். விதிக்கப்படும் வரியை அனைத்துத் துறைக்கும் பகிர்ந்தளித்துச் செலவு செய்வார்கள்.

இது ஓர் நாட்டின் அரசாங்கம் செய்ய வேண்டிய பணி. அதை கிராமங்களில் அந்தக் காலத்தில் கிராம சபைகளிலேயே செய்துவிடுவார்கள். இப்படி, நம் முன்னோர்களின் அறிவியல் அபாரமானது. அதன் ஒரு துளிதான் பஞ்சாங்கம் கணிப்பதும் படிப்பதும்.

-ராஜ்

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

3 நிமிட வாசிப்பு

இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கு காரணம்!

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

4 நிமிட வாசிப்பு

ஆம்புலன்ஸில் காத்திருக்கும் நோயாளிகள்!

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தனியுரிமை கொள்கை: வாட்ஸ்அப் அதிரடி!

வெள்ளி 16 ஏப் 2021