கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிப்பு!

public

தொடர்ந்து கொரோனா அதிகரிப்பால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக திருப்பதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதிக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் எங்கும் வெளியில் சுற்றாமல் பஸ், ரயில் நிலையங்களுக்குச் சென்று அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில்தான் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதைத் தொடர்ந்து திருப்பதியில் கடந்த சனிக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. மாலை 7 மணி முதல் காலை 6 மணி வரை கடைகள் அனைத்தும் மூட உத்தரவிடப்பட்டது. இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பரவல் குறையவில்லை.

இந்த நிலையில் திருப்பதி மாநகராட்சி ஆணையர் கிரிஷா, எம்.எல்.ஏ. கருணாகரரெட்டி, நகரக் கண்காணிப்பாளர் வெங்கட அப்பலநாயுடு உள்ளிட்டோர் வியாபாரிகள் சங்கங்கள், ஆட்டோ, ஜீப் ஓட்டுநர் நலச்சங்கங்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.

அதைத் தொடர்ந்து ஆணையர் கிரிஷா பேசுகையில், “திருப்பதியில் ஒவ்வொரு பகுதியிலும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் மக்கள் சுய கட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

மத்திய அரசின் உத்தரவின்படி திருப்பதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள், வியாபார நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

வாகனங்களிலும் தனி நபர் இடைவெளியைக் கடைப்பிடித்து மக்கள் பயணம் செய்ய வேண்டும். முகக்கவசம், சானிடைசர் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். முகக்கவசம் இல்லாமல் வெளியில் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஒருபுறம் கொரோனா கட்டுப்படுத்தும் பணியுடன், தடுப்பு ஊசி போடும் பணியும் நடத்தப்படும்” என்றார்.

மேலும், திருப்பதிக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் எங்கும் வெளியில் சுற்றாமல் பஸ், ரயில் நிலையங்களுக்குச் சென்று அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் திருப்பதி ரயில், பேருந்து நிலையங்கள் இரவு, பகல் என அனைத்து நேரங்களிலும் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால், கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பயணிகள் இல்லாமல் திருப்பதி வெறிச்சோடி காணப்படுகிறது.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *