மரண அவலங்களுக்கிடையில் ஜிஎஸ்டி ஏப்ரல் வசூல் ரூ.1.41 லட்சம் கோடி!

public

நாட்டில் கொரோனா கோரத்தாண்டவம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், பல மாநிலங்களில் மரண ஓலம் ஒலித்துக்கொண்டிருந்தாலும், ஜிஎஸ்டி வரி வசூலில் மத்திய அரசு புதிய சாதனை படைத்துள்ளது. இதன் புதிய உச்சமாக ஏப்ரல் மாதத்தில் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. தொடர்ந்து, ஏழாவது மாதமாக வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் 2017ஆம் ஆண்டின் ஜூலை மாதம் 1ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மத்திய அரசு அமல்படுத்தியது. கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு வரி வசூலில் சற்று தொய்வு ஏற்பட்ட நிலையில், ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதால் கடந்த ஏழு மாதங்களாக ஜிஎஸ்டி வசூல் வேகமெடுக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் தினமும் மூன்று நான்கு லட்சம் பேர் பாதித்தும், மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் வருகின்றனர். பல மாநிலங்களில் எங்கும் மரண ஓலம் கேட்கிறது அப்படி இருந்தபோதிலும், ஜிஎஸ்டி வசூலில் புதிய உச்சமாக கடந்த மாதம் ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 14 சதவிகிதம் அதிகம். கடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலானது. தற்போது ரூ.1.41 லட்சம் கோடி வசூலில், மத்திய ஜிஎஸ்டி வரியாக ரூ.27,837 கோடியும், மாநில ஜிஎஸ்டி வரியாக ரூ.35,621 கோடியும் வசூலாகி உள்ளது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியாக ரூ.68,421 கோடியும் வசூலானது. செஸ் வரியாக ரூ.9,445 கோடி வசூலானது.

ஜிஎஸ்டி வரி ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டபின், 2021 மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி வசூலான தொகைதான் அதிகபட்சமாக இருந்தது. அதை ஏப்ரல் மாத வசூல் முறியடித்துள்ளது. ‘தொடர்ந்து ஏழாவது மாதமாக ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகி வருகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதாரச் சூழல் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீண்டு வருவது தெளிவாகிறது என மத்திய நிதி அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால் அனைத்து பரிவர்த்தனைகளையும் முடிக்க நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்து வருவதால் வரி வசூல் அதிகரித்திருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம், மீண்டும் நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு விதிக்கப்பட்டு வருவதால், இந்த மாதம் உண்மையான சவால் காத்திருப்பதாகவும் அவர்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

**-ராஜ்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *