pகிச்சன் கீர்த்தனா: ரம்ஜான் ஸ்பெஷல் – ஹலீம்

public

இறைவனின் அருளைப் பெறவேண்டி நோன்பிருக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகை மிக மிக முக்கியமானது. அன்பை மட்டுமல்லாது ருசியான உணவு வகைகளையும் இந்த நன்னாளில் அவர்கள் பரிமாறிக்கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட ரம்ஜான் சிறப்பு உணவுகளில் முக்கியமானது ஹலீம். சத்துகள் நிறைந்த இந்த ஹலீமை நாமும் வீட்டிலேயே செய்து இந்தச் சிறப்பு மாதத்தைக் கொண்டாடலாம்.

**என்ன தேவை?**

வெங்காயம் – 5

எலும்பில்லாத சிக்கன் அல்லது மட்டன் – அரை கிலோ

இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

தயிர் – 100 கிராம்

எலுமிச்சை – ஒன்று (சாறு எடுக்கவும்)

கொத்தமல்லி, புதினா இலை – ஒரு பிடி

நறுக்கிய பச்சை மிளகாய் – 6

கரம் மசாலாத்தூள் – 3 டீஸ்பூன்

கிராம்பு – 5

ஏலக்காய் – 3

சீரகம் – அரை டீஸ்பூன்

பட்டை – 2

நெய் – 5 டீஸ்பூன்

சம்பா ரவை – 100 கிராம்

உளுத்தம்பருப்பு – 3 டீஸ்பூன்

மசூர்பருப்பு – 2 டீஸ்பூன்

பாசிப்பருப்பு – 2 டீஸ்பூன்

கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்

பாஸ்மதி அரிசி -2 டீஸ்பூன்

பாதாம் – 5

முந்திரி – 15

எண்ணெயில் பொரித்த வெங்காயத் துண்டுகள் – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

ஒரு கிண்ணத்தில் சிக்கனை எடுத்து இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மிளகுத் தூள், தயிர், எலுமிச்சைச்சாறு, நறுக்கிய பச்சை மிளகாய், ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், உப்பு, சிறிதளவு கொத்தமல்லி மற்றும் புதினா சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் நெய்விட்டு சூடாக்கவும். இதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதில் கிராம்பு, ஏலக்காய், சீரகம், பட்டை ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். பின்னர் இதனுடன் ஒரு மணிநேரம் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து வதக்கவும். பிறகு இதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் வரும்வரை வேகவிட்டு பின்னர் அடுப்பை அணைக்கவும்.

குக்கரில் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து வெந்த சிக்கன் கலவையில் இருக்கும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்ற மசாலாப் பொருள்களை வெளியே எடுத்து விடவும். பின்னர் அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரில் உள்ள சிக்கனைக் கிளறவும்.

மற்றுமொரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்விட்டு சூடாக்கி அதில் உளுத்தம்பருப்பு, மசூர்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, பாஸ்மதி அரிசி, பாதாம் மற்றும் முந்திரியை ஒன்றாகச் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதனை மிக்ஸியில் ரவை போலப் பொடித்துக்கொள்ளவும்.

சம்பா ரவையை நன்றாகக் களைந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் மிக்ஸியில் அரைத்துவைத்த இந்தப் பொடியையும் சேர்க்கவும். பிறகு இதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். குக்கரின் ஆவி அடங்கியவுடன் மூடியைத் திறந்து கலவையை நன்கு மசித்துக் கொள்ளவும். பின்னர் இக்கலவையுடன் வேகவைத்த சிக்கன் கலவையைச் சேர்க்கவும். பின்னர் இதில் ஒன்றரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், மீதமுள்ள நெய் மற்றும் சிறிதளவு பொரித்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குறைவான தீயில் கலவையைக் கைவிடாமல் நன்கு கிளறவும்.

கலவை மிகவும் இறுக்கமாக இருந்தால் தேவையான அளவுக்கு வெந்நீர் சேர்த்தும் கிளறலாம். கடைசியாக கலவை கிரேவி பதத்துக்கு வந்ததும் கீழே இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்த்துப் பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ரம்ஜான் ஸ்பெஷல் – நோன்புக் கஞ்சி](https://www.minnambalam.com/public/2021/05/03/1/Ramalan-fasting-kanchi)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *