மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 10 மே 2021

முதல் பெண்கள்- இந்தியாவின் முதல் பெண் விமானப்படை அதிகாரி மருத்துவர் விஜயலட்சுமி ரமணன்

முதல் பெண்கள்-  இந்தியாவின் முதல் பெண் விமானப்படை அதிகாரி  மருத்துவர் விஜயலட்சுமி ரமணன்

நிவேதிதா லூயிஸ்

“முதலில் விமானப்படைக்குப் பணியாற்றச் சென்றபோது கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது. ஆனால், வேலை என்று வந்த பிறகு திரும்பிப் பார்க்க எதுவுமில்லை. என்னைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருந்தார்கள்; உறுதுணையாகப் பலரும் இருந்தார்கள். எல்லா நிலையிலும் எனக்கு உதவி கிடைத்தது” ஓடிக்கொண்டிருக்கும் யூடியூப் காணொலிக் காட்சியில் மருத்துவரும், ஓய்வுபெற்ற விமானப் படை விங் கமாண்டருமான விஜயலட்சுமி ரமணன் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நாட்டின் முதல் விமானப்படை பெண் அதிகாரியாகத் துணிவுடன் 24 ஆண்டுகள் விமானப்படை மருத்துவமனைகளில், மருத்துவர் விஜயலட்சுமி ரமணன் பணியாற்றியிருக்கிறார்.

“இந்திய விமானப்படையின் முதல் பெண் அதிகாரி, கடந்த (2020) ஆண்டு அக்டோபர் 18 அன்று காலமானார். ஓய்வுபெற்ற விங் கமாண்டர் விஜயலட்சுமி ரமணனுக்கு அஞ்சலிகள் குவிந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தின் மகளாக வாழ்ந்தும் இறந்தும் போனவரை, அவர் பிறந்த மலையாள மண் அறியவும் இல்லை, நினைவு கொள்ளவும் இல்லை” என்று மலையாளத்தின் பிரபல இதழான ‘மலையாள மனோரமா’ குறிப்பிடுகிறது.

சோகம் என்னவென்றால், தமிழ்நாட்டின் மகளாக வாழ்ந்தும் இறந்தும் போன விஜயலட்சுமியைத் தமிழ்நாடும் நினைவுகொள்ளவில்லை. “என் மனைவிக்குப் பிரசவம் பார்த்தது டாக்டர் விஜயலட்சுமிதான். மூன்று முறை அவரை நான் சந்தித்திருக்கிறேன். அன்பானவர், இனிமையாகப் பழகக் கூடியவர். அவரைப் பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள நீங்கள் என் மாமியாரைத் தொடர்பு கொள்ளுங்கள். அவர்கள் இருவரும் 20 ஆண்டுக்காலம் ஒருவரையொருவர் அறிந்தவர்கள்” என்று சொல்லி, கோழிக்கோட்டில் வசிக்கும் ராஜம்மாவின் அறிமுகம் தந்தார் ‘ஃப்ரன்ட்லைன்’ இதழின் ஆசிரியர் ரா.விஜயசங்கர்.

ஐ லவ் ஹர்

“ஐ லவ் ஹர்” என்று தான் விஜயலட்சுமி குறித்து ராஜம்மா பேசத் தொடங்குகிறார். “எங்கள் குடும்பத்துக்கு நெடுங்காலமாக அவர்தான் மருத்துவர். ‘டாக்டர் ரமணன்’ என்றே அவரை அழைப்போம். அவர் மிகவும் ‘ஸ்ட்ரிக்ட்’. அதேநேரம் நோயாளிகளிடம் அன்பும் கனிவும் மிக்கவர். 1979ஆம் ஆண்டு முதன்முறை ‘ஹிஸ்டரக்டமி’ சிகிச்சை பெறும்போதுதான் எனக்கு அவர் அறிமுகம் கிடைத்தது. 1979 ஜனவரி மாதம் 31 அன்று அவர் ஓய்வு பெற்றார் என்று நினைக்கிறேன். அவரது பணி ஓய்வுக்குப் பின் கமாண்ட் மருத்துவமனையில் அவரால் எனக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று என்னிடம் சொன்னவர், ஜனவரி 31க்குள் எனக்கு அறுவை சிகிச்சை செய்துவிட வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார். ஜனவரி மாத மத்தியில் வெற்றிகரமாக அதைச் செய்தும் முடித்தார்.

“மருத்துவமனையிலிருந்த 9 நாள்களும் என்னை அக்கறையுடன் கவனித்துக்கொண்டார். அறுவை சிகிச்சைக்காக எனக்கு மயக்க மருந்து செலுத்துவதற்கு முன் என்னிடம், ‘யாரைக் கும்பிட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களைக் கும்பிட்டுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார். ‘யாரை நீங்கள் அதிகம் நம்புவீர்கள்? எந்தக் கடவுளை? வெங்கடரமணரையா? உங்கள் கணவரையா? குடும்பத்தையா?’ என்று கேட்டார். ‘டாக்டர், வேறு யாரையும் விட உங்களை நான் இந்த நொடி அதிகம் நம்புகிறேன், வணங்குகிறேன்’ என்று பதில் சொன்னேன். அவரது கண்ணில் சட்டென நீர் தளும்பிவிட்டது. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது” என்று ராஜம்மா சொல்கிறார்.

மருத்துவரின் மரபுப் பின்னணி

1924 பிப்ரவரி 27 அன்று திருப்பனித்துரா நாராயண ஐயர் - சாத்தபுரம் ஆனந்தலட்சுமி தம்பதியின் மூன்றாவது மகளாக விஜயலட்சுமி பிறந்தார். குடும்பத்தில் மொத்தம் ஏழு குழந்தைகள். அவர்களில் இளைய தங்கை மட்டும் இப்போது கனடாவில் வசிக்கிறார். “அம்மாவின் குடும்பம் பாரம்பரியம் மிகுந்த இசைக் குடும்பம்” என்ற அறிமுகத்துடன் பேசுகிறார் விஜயலட்சுமியின் மகள் சுகன்யா லட்சுமிநாராயண். மாற்றுத்திறனாளிகள் குறித்து தொடர்ச்சியாக எழுதியும் பேசியும் வருபவர் இவர். தற்போது பெங்களூரில் வசித்துவருகிறார்.

“தியாகராஜரிடம் நேரடியாக இசை கற்ற அப்பு பாகவதர் திருவிதாங்கூர் சமஸ்தான வித்வான் ஆனார். அவர் மகன் டி.ஏ.துரைசாமி ஐயர். இவரும் பிரபல இசைக்கலைஞர்; வழக்கறிஞர். 1892ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் திருவனந்தபுரம் வந்து தங்கினார். அப்போது ‘சரஸ்வதி விலாஸ்’ என்ற வீட்டிலிருந்து வந்த இனிய இசைக்கு மயங்கி வீட்டினுள் நுழைந்தவர், அங்கு பாடிக்கொண்டிருந்த துரைசாமி ஐயரின் இசை மழையில் நனைந்து அந்த இரவு அவர் வீட்டிலேயே தங்கிவிட்டார். இன்றும் அம்மாவின் தாத்தா துரைசாமி ஐயர் பெயரில் எர்ணாகுளம், கொச்சியில் சாலை ஒன்று உள்ளது. துரைசாமி ஐயரின் மகனான என் தாத்தா நாராயண ஐயரும் இசைக்கலைஞர்; தபால் தந்தித்துறையில் பணியாற்றியவர். முதலாம் உலகப்போரில் கலந்துகொண்டவர்” என்று சுகன்யா சொல்கிறார்.

பிறந்தது பாலக்காடு என்றாலும், தந்தை நாராயணனின் பணியின் நிமித்தம் மதராஸ் மாகாணத்தின் பல ஊர்களில் விஜயலட்சுமியின் குடும்பம் வசிக்க நேர்ந்தது. திருச்சி, மதுரை, சென்னை சாந்தோம் என்று குடும்பம் இடம் மாறியதால் சிறுமி விஜயலட்சுமி, பல பள்ளிகளில் படிக்க நேர்ந்தது. இசையில் பெரும் நாட்டம்கொண்டிருந்த விஜயலட்சுமி, அப்போது தமிழகத்தின் பிரபல இசைக்கலைஞர்களாக மிளிர்ந்தவர்களிடம் இசை கற்றுக்கொண்டார். 15 வயது முதல் அனைத்திந்திய வானொலியின் ‘ஏ’ கிரேடு கலைஞராக வானொலி இசை நிகழ்ச்சிகள் செய்துவந்திருக்கிறார். சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை அறிவியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு தங்குமிட வசதி இல்லாத காரணத்தால் ராணிமேரி கல்லூரி விடுதியில் தங்கி, மாநிலக் கல்லூரியில் படித்து முடித்தார். அதன் பின் 1943ஆம் ஆண்டு மதராஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார்.

1948ஆம் ஆண்டு ‘சிறந்த மாணவியாக’ மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்தார். அந்த ஆண்டின் மருத்துவக் கல்லூரி பால்ஃபோர் நினைவுப் பதக்கமும், பரிசும் பெற்றார். பின்னர் மகப்பேறு மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். எழும்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சில காலம் பணியாற்றினார்.

“அம்மா எழும்பூர் மருத்துவமனையில் பணியாற்றியபோது அவருக்குப் பயிற்சி தந்த மருத்துவத் தம்பதி கிருஷ்ண மேனன் மற்றும் மாதவி அம்மா. இவர்கள் தந்த பயிற்சி, அம்மாவின் பணியைச் செம்மைப்படுத்தியது. மாதவி அம்மாதான், என் அம்மாவுக்கு நான் பிறக்கும்போது மருத்துவம் பார்த்தவர். அவர்களிடையே இறுதிவரை நல்ல உறவு இருந்தது” என்று சொல்கிறார் விஜயலட்சுமியின் மகள் சுகன்யா.

மனைவிக்காக கணவர் வாங்கிய விமானப் படை விண்ணப்பம்

1955 பிப்ரவரி 5 அன்று கல்பாத்தியைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.விஸ்வநாதன் - சுப்பலட்சுமி தம்பதி மகனான டாக்டர் கே.வி.ரமணன் என்பவருடன் விஜயலட்சுமிக்குத் திருமணம் நடந்தது. டாக்டர் விஸ்வநாதன் 1930களிலேயே அமெரிக்காவின் பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றவர். மதராஸ் மாகாணத்தின் பொது சுகாதாரத்துறை இயக்குநராகப் பணியாற்றியவர், பின்னாளில் உலக சுகாதார நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். டாக்டர் ரமணன் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அதே ஆண்டு விஜயலட்சுமியின் தந்தை நாராயணன் இறந்து போனார்.

பெங்களூருவில் ரமணன் பணியாற்றி வந்த நேரத்தில் குறுகிய காலப் பணிகளுக்கான நியமனங்களை விமானப்படை செய்துகொண்டிருந்தது. கணவர் ரமணன், மனைவிக்காக விண்ணப்பப் படிவம் வாங்கிவந்து, நிரப்பி அனுப்பச் செய்தார். விமானப்படையில் அதுவரை பெண்களை அதிகாரிகளாக நியமித்தது இல்லை. ஆனால், தேவையை முன்னிட்டு (பாகிஸ்தானுடன் எல்லை மோதல்கள் அதிகம் இருந்த நேரம் அது) அப்போது விஜயலட்சுமியை விமானப்படை ஃப்ளைட் லெஃப்டினன்டாக பெங்களூரிலேயே பணி அமர்த்தியது.

1955 ஆகஸ்ட் 2 அன்று சர்வீஸ் எண் 4971 என்ற எண்ணுடன் விஜயலட்சுமி ரமணன் இந்திய விமானப்படையின் முதல் பெண் குறுகிய கால ‘கமிஷண்டு’ அதிகாரியானார். கணவரும் மனைவியும் நாட்டின் விமானப்படையில் பணியாற்றிய முதல் தம்பதி ஆனார்கள். தன் தாயும் தந்தையும் நெருக்கமான தம்பதியாக, பெரும் காதலுடன் இருந்தார்கள் என்று சுகன்யா சொல்கிறார். கணவர் ரமணன், மனைவி விஜயலட்சுமிக்கு நான்கு ஆண்டு பணியில் சீனியர்.

“ராணுவப் பணியில் சேரப்போகிறேன் என்றதும் எனக்கு என் மாமனாரின் முழு ஆதரவு இருந்தது. முழு குடும்பமும் நான் அதிகாரியாக வேண்டும் என்று பெரிதும் விரும்பியது. என்னைத் தேர்ந்தெடுப்பார்களா என்ற ஐயம் எனக்கு இருந்தது. ஆனால், தலைமையகம் என்னைத் தேர்ந்தெடுப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தது. அப்போது ராணுவத்திலிருந்த என் கணவர் விமானப்படைப் பணிக்கு ‘செக்கண்ட்’ செய்யப்பட்டிருந்தார். (அந்த காலத்தில் இவ்வாறு முப்படைகளுக்கு இடையே அதிகாரிகள் பணியின் நிமித்தம் மாற்றி அனுப்பப்பட்டுள்ளார்கள்) அதனால் என்னையும் விமானப்படைக்கே அனுப்ப வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்” என்று பின்னாளில் ராஜ்ய சபை தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜயலட்சுமி கூறியுள்ளார்.

விமானப் படை அதிகாரியான விஜயலட்சுமி தன் குடும்பத்தை எவ்வாறு கவனித்துக் கொண்டார்? விஜயலட்சுமியின் பிள்ளைகள் என்ன சொல்கிறார்கள்?

(நாளை தொடரும்)

கட்டுரையாளர் குறிப்பு

நிவேதிதா லூயிஸ்... சென்னையைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர், எழுத்தாளர், சமூக ஆர்வலர், பயணக் காதலர். அனைத்து மத வழிபாட்டுத் தலங்கள், வாழ்விடங்கள், பண்பாட்டுத் தளங்களில் ஆர்வத்துடன் இயங்குபவர். காலத்தில் கரைந்தும் மறைந்தும் போன சாதனைப் பெண்களின் வாழ்க்கையைச் சொல்லும், அவள் விகடனில் தொடராக வந்த "முதல் பெண்கள்" என்னும் நூலையும், நம் நீண்ட தமிழ்ப் பண்பாட்டு மரபைச் சொல்லும் "ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை" என்ற தொல்லியலை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் நூலையும் எழுதியுள்ளார். சென்னை வரலாற்றின் சொல்லப்படாத பக்கங்களை மரபு நடைகள் மூலமும், தன் எழுத்து மூலமும் தொடர்ந்து ஆவணப்படுத்திக்கொண்டு வருகிறார். இவரின் பூட்டான் பயணக் கட்டுரைத் தொடரும், சென்னை பற்றிய காணொளிகளும் மின்னம்பலத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழிசையில் கிறிஸ்துவம் என்ற செயல் சொற்பொழிவை தொடர்ந்து ஆற்றிவருகிறார்.

தகவல் உதவி:

சுகன்யா லட்சுமி நாராயண்

ரா. விஜயசங்கர்

ராஜம்மாள் வி.ஜே.கே.நாயர்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 10 மே 2021