மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 30 மே 2021

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - எடையைக் குறைக்க இதுதான் நேரம்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - எடையைக் குறைக்க இதுதான் நேரம்!

கொரோனாவின் இரண்டாவது அலை ஒருபுறம் துரத்திக்கொண்டிருக்கிறது. கோடை வெப்பம் இன்னொருபுறம் வாட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உடல் பருமன் என்பது தற்போதைய சூழ்நிலையில், வீட்டில் அடைந்துகிடக்கும் பலருக்கும் பிரச்சினையாகி வருகிறது. இந்த நிலையில், உடல் எடையைக் குறைக்க இதுவே சரியான நேரம். இந்த நாட்களைப் பயன்படுத்தி உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம். அதோடு கோடைக்காலத்தில் உடல் சூட்டைத் தவிர்க்கும் உணவுப் பழக்கங்களையும் எடுத்துக்கொள்ளலாம் என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.

சம்மரில் திட உணவுகள் எடுத்துக்கொள்வதை விட நீர்ச்சத்து, நார்ச்சத்து மிகுந்த திரவ உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. வெள்ளரி, புடலை, வாழைத்தண்டு, பூசணி போன்ற காய்கறிகளில் கலோரிகள் குறைவாகவே இருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால்கூட உடல் எடை அதிகரிக்காது. அவற்றிலுள்ள நார்ச்சத்து கொழுப்பைக் கரைக்க உதவும். மேலும் நீர்ச்சத்து அதிக அளவில் உள்ள உணவுகள் உடல் சூட்டை தணித்து எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கவும் உதவும்.

கூடுமானவரை எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. மேலும் டீ, காபி போன்றவை மந்த நிலையை ஏற்படுத்தும் என்பதால் அவற்றையும் தவிர்க்கலாம். அதற்குப் பதிலாக, இந்த சீசனில் கிடைக்கும் தர்பூசணி, நுங்கு, பதநீர், கிர்ணி, வெள்ளரி போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

ஜூஸ் குடிப்பதைவிட பழங்களாகச் சாப்பிடுவதே நல்லது. பழங்களாக எடுத்துக்கொள்ள முடியாதவர்கள் சர்க்கரை, ஐஸ்கட்டிகள் இல்லாமல் ஜூஸ் எடுத்துக்கொள்ளலாம். மாம்பழம், பலா, பப்பாளி போன்றவையும் இந்த சீசனில் அதிக அளவில் கிடைக்கும். ஆனால், அவை உடல் சூட்டை அதிகரிக்கும். அதிக அளவு சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு என்பதால் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.

சப்ஜா விதைகள், பாதாம் பிசின் போன்றவை உடல் சூட்டைத் தவிர்க்க உதவும். எனவே, கோடைக்காலத்தில் தினமும் சப்ஜா விதைகள் அல்லது பாதாம் பிசின் பயன்படுத்தலாம். இவற்றை முதல் நாள் இரவே ஊறவைத்து, நீங்கள் குடிக்கும் தண்ணீர், ஜூஸ், இளநீர், மோர் இப்படி ஏதாவது ஒன்றில் கலந்துகொள்ளலாம். இவற்றில் துத்தநாகம், சல்ஃபர் ஆன்டிஆக்ஸிடன்ட், வைட்டமின் ஏ,பி,சி போன்ற சத்துகள் உள்ளன. இது பித்தத்தைக் குறைக்க உதவும். மேலும் உடல் சூட்டையும் தவிர்க்கும். அஜீரண கோளாறுகளையும் தடுக்கும்.

பழைய சாதம் கோடைக்கு ஏற்ற அருமையான உணவு. இதில் இருக்கும் லாக்டிக் அமிலம் சாதத்துக்கு புளிப்புச் சுவையைத் தரும். இதில் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான உணவாக அமைகிறது.

பழைய சாதத்தில் இருக்கும் தண்ணீரை வடித்து சிறிது கல் உப்பு கலந்து குடிக்கலாம். இதில் வைட்டமின் பி12 சத்து இருப்பதால் உடலை எனர்ஜியுடன் வைத்திருக்க உதவும். மேலும் வயிற்றுப் புண்களைத் தடுக்கும்.

வேலையின் தன்மை, வெயிலின் தாக்கம், வியர்வையின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் அவர்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய தண்ணீரின் அளவு மாறுபடும். உடல் சூடு, உடலுக்குத் தேவையான தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக சிலருக்கு சிறுநீரின் நிறமே மாறியிருக்கும். அப்படிப்பட்டவர்கள் அதிகளவிலான தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நீர் ஆகாரங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

வெள்ளை பூசணிக்காயின் சதைப்பகுதியை ஜூஸாக்கிக் கொள்ளவும். இத்துடன் சிறிது மோர், உப்பு, மிளகுத்தூள் கலந்து குடித்துவர நாவறட்சி நீங்கும். உடல் சூட்டின் காரணமாக ஏற்படும் கண் எரிச்சல் போன்றவற்றிலிருந்தும் தப்பிக்கலாம்.

பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் குடமிளகாய், கொத்தமல்லி, வேர்க்கடலை, துருவிய வெள்ளரி, துருவிய வெள்ளை பூசணி போன்றவற்றை சம அளவில் ஒன்றாகக் கலந்து சாலட் செய்து சாப்பிடலாம்.

வேகவைத்த வாழைத்தண்டு, துருவிய முள்ளங்கி, வெள்ளரி, கேரட் போன்றவற்றைத் தினமும் ஒன்றாகத் தயிருடன் கலந்து தயிர் பச்சடியாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

தினமும் மோர் அருந்துவது நல்லது. மோரில் உள்ள புரோபயாடிக் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். தயிரில் தண்ணீர் கலந்து, மோராகக் குடிக்காமல், தயிரைக் கடைந்து நீர் மோராகக் குடிக்கலாம்.

கூடுமானவரை ஃபிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தும் குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது. கோடைக்காலம் முடியும் வரை மண்பானை தண்ணீரை பருகலாம்.

இவை அனைத்தும் வெயில் தாக்கத்தைக் குறைப்பதோடு பருமனைக் கட்டுப்படுத்தும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நேற்றைய ரெசிப்பி: கொத்தமல்லித் துவையல்

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

ஞாயிறு 30 மே 2021