கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை - பேபிகார்ன் ஃப்ரை


ஹோட்டலுக்குச் சென்றால் பலராலும் விரும்பி ஆர்டர் செய்யப்படும் உணவு வகை பேபிகார்ன் ஃப்ரை. அப்படிப்பட்ட இதை ஹோட்டல்கள்ல மட்டும்தான் வாய்க்கு ருசியா சமைக்க முடியுமா என்ன... அதை நம்ம வீட்ல இருந்தே ஆரம்பிக்கலாமே என்று நினைப்பவர்கள், கொஞ்சம் ஆர்வத்துடன் முயற்சி செய்தால் போதும். ஹோட்டல் ருசியை வீட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைடிஷ் இது.
என்ன தேவை?
பேபிகார்ன் – கால் கிலோ
எலுமிச்சைப்பழச் சாறு – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள் – தேவைக்கேற்ப
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கடலைமாவு, அரிசிமாவு – தலா ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம், பெரிய தக்காளி – தலா ஒன்று
பச்சை மிளகாய் – 2 மிளகாய்த்தூள்
கரம் மசாலாத்தூள் – தேவைக்கேற்ப
தனியாத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
செட்டிநாடு மசாலாத்தூள் (டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக்கொதிக்கவைத்து, கழுவிய பேபி கார்னை 2 நிமிடங்கள் போட்டு பின் தண்ணீரை வடிகட்டவும். கார்னை நீளவாக்கில் வெட்டவும்.
ஒரு தட்டில் சிறிதளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச்சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது சிறிதளவு சேர்த்து, இதில் நறுக்கிய பேபிகார்ன், சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மீதமுள்ள இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, மீதமுள்ள மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், செட்டிநாடு மசாலாத்தூள், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்க வும். இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இறக்கும்போது கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும்.