மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஆக 2021

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

கடந்த ஒன்றரை ஆண்டுக் காலமாகக் கொரோனா நோய்த் தொற்று ஏற்படுத்திவரும் பாதிப்பின் காரணமாக மக்கள் பலரும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவது அதிகரித்திருக்கிறது. தனிநபர் கடன்கள் உட்பட பல்வேறு கடன்கள் வாங்குவது அதிகரித்தாலும், நகைக்கடனும் கார் கடனும் வாங்குவது கணிசமான அளவில் அதிகரித்திருக்கிறது.

ரிசர்வ் வங்கி அளிக்கும் தகவலின்படி, கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரையில் கடன் பெற்றிருப்பவர்கள்... தனிநபர் கடன் கடந்த ஆண்டு 11.9 சதவிகிதம் வளர்ந்து ரூ.27,86,519 கோடியாக உயர்ந்திருக்கிறது. தனிநபர் கடனுக்கு மற்ற கடன்களைக் காட்டிலும் வட்டி அதிகம் என்றாலும், எளிதில் வாங்கி, விரைவில் கட்டி முடித்துவிடக்கூடிய கடன் என்பதால், மக்களில் பலரும் இந்தக் கடனை வாங்கியிருக்கிறார்கள்.

வீட்டுக்கடன் பிரிவில் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கையானது 9.7 சதவிகிதம் உயர்ந்து, ரூ.14,64,645 கோடியாக உயர்ந்திருக்கிறது. கொரோனா காலத்தில் தனி வீடுகளின் தேவை உணர்ந்த பலரும் வீட்டுக்கடன் மூலம் வீடு கட்டத் தொடங்கி இருக்கிறார்கள். அதுதவிர, வீட்டிலிருந்து வேலை செய்யும் முறை நடைமுறைக்கு வந்ததால், பலரும் தங்களது சொந்த ஊரில் வீடு கட்ட வங்கிக்கடன் வாங்கியிருக்கிறார்கள். குறைந்த வட்டி விகிதம், எளிதில் கடன் கிடைப்பது ஆகிய காரணங்களாலும் வீட்டுக்கடன் வாங்குவது கடந்த ஓராண்டுக் காலத்தில் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

கடந்த ஓராண்டுக் காலத்தில் வாகனக்கடனும் 11 சதவிகிதம் அதிகரித்து, ரூ.2,38,214 கோடியாக அதிகரித்திருக்கிறது. கொரோனா காலத்தில் பொதுவாகனப் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு இருசக்கர வாகனமோ அல்லது காரோ வேண்டும் என்று நினைத்ததன் காரணமாக, பலரும் வாகனக் கடன் மூலம் வாகனங்களை வாங்கி இருக்கிறார்கள்.

ஆனால், தங்க நகைக்கடன் வாங்குவது மட்டும் கடந்த ஓராண்டு காலத்தில் 81 சதவிகிதம் அதிகரித்து, ரூ.62,221 கோடி கடன் தரப்பட்டிருக்கிறது. கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களும், திடீரென வருமானம் குறைந்தவர்களும் தங்கள் செலவுகளைச் சமாளிக்க நகைகளை அடமானம் வைத்துப் பெறுவது கணிசமாக உயர்ந்ததையே இது காட்டுகிறது.

மேற்கண்ட கடன்கள் எல்லாம் பெரிய அளவில் உயர்ந்திருந்தாலும், கிரெடிட் கார்டு மூலம் கடன் வாங்குவது 5.3 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே வளர்ந்திருக்கிறது. இந்தப் பிரிவில் இதுவரை ரூ.1,02,757 கோடி மட்டுமே கடன் தரப்பட்டிருக்கிறது. வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை அடமானமாக வைத்துக் கடன் பெறுவது கடந்த ஓராண்டில் 7.2 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே அதிகரித்திருக்கிறது. இந்தப் பிரிவில் ரூ.65,891 கோடி மட்டுமே கடன் தரப்பட்டிருக்கிறது.

கடந்த ஓராண்டுக் காலத்தில் வீட்டுக்குத் தேவையான பல்வேறு பொருட்களை வாங்குவதற்கான நுகர்வோர் கடன் வாங்குவது 19.8 சதவிகிதம் குறைந்திருக்கிறது. கொரோனா காலத்தில் நுகர்வோர் பொருட்களை விற்கும் கடைகள் பல மாதங்களுக்கு மூடப்பட்டிருந்தது இதற்கு முக்கியமான காரணம். தவிர, இந்தக் காலத்தில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்ததும் ஒரு காரணம் ஆகும். அதே போல, கல்விக் கடன் வாங்குவதும் 3.5 சதவிகிதம் குறைந்து, ரூ.62,720 கோடிக்கு மட்டுமே கடன் தரப்பட்டிருக்கிறது.

தங்கநகைக் கடனும், கார் கடனும் கணிசமாக அதிகரித்திருப்பதால், இந்தக் கடன்கள் இனிவரும் நாள்களில் சரியாகக் கட்டப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பில் வங்கித் துறை வட்டாரத்தினர் இருக்கின்றனர். காரணம், இந்தக் கடன்கள் சரியாகத் திரும்பக் கட்டப்படாமல் போனால், காரையோ, தங்கநகைகளையோ ஏலம் விடும் அபாயத்துக்கு உள்ளாகும். கார் அல்லது நகைக்கடன் வாங்கியவர்கள் கடன் பணத்தைத் திரும்பக் கட்டவில்லை என்றாலும், அவற்றை ஏலம் விடும் நடவடிக்கையை வங்கித் துறையினர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நிறுத்தி வைத்திருந்தனர்.

“ஜூன் மாதத்துக்குப் பிறகு, கொரோனா பாதிப்பு குறைந்து, ஓரளவு வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பியதால், பலரின் வருமானம் பழைய நிலைக்குத் திரும்பத் தொடங்கி இருக்கிறது. இனி இந்தக் கடன்களை மக்கள் சரியாகத் திரும்பக் கட்டுவார்கள் என வங்கித் துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, இந்தக் கடன்களுக்கான பணம் கட்டப்படாதபட்சத்தில் இவற்றை ஏலம் விட்டு, கடன் பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு ஏற்படும். இப்படி ஏலம் விடுவது அதிகரித்தால், கடனை வாங்கிய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும்; கடன் தந்த நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும்” என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

திங்கள் 2 ஆக 2021