கிச்சன் கீர்த்தனா: ட்ரைபாடு (முக்காலி) தோசை

public

தென்னிந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு தோசை. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். அப்படி பலவிதமான வடிவங்களில் வார்த்தெடுக்கப்படும் தோசைகளில் இந்த முக்காலி தோசையும் பிரபலமாகி வருகிறது.

**என்ன தேவை?**

சிறுதானிய தோசை மாவு – 2 கரண்டி

ஸ்வீட் கார்ன் – 40 கிராம்

வேகவைத்த பச்சைப்பட்டாணி – 40 கிராம்

பனீர் – 30 கிராம்

முட்டைகோஸ் – 15 கிராம்

பெரிய வெங்காயம் (நறுக்கியது) – 20 கிராம்

வெங்காயத்தாள் (நறுக்கியது) – 10 கிராம்

சீஸ் – 20 கிராம்

ரெட் சட்னி – ஒரு கரண்டி

வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்

செஸ்வான் சாஸ் – ஒரு டீஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

தோசைக்கல்லில் 2 கரண்டி தோசை மாவை ஊற்றி தேய்த்துக்கொள்ளவும். பின்னர் தோசை மேல் நறுக்கிவைத்த வெங்காயம் போட்டு, அதன் மேல் வெண்ணெய் சேர்த்து, அது உருகிய உடன் ஸ்வீட் கார்ன், பச்சைப் பட்டாணி, துருவிய முட்டைகோஸ், துருவிய பனீர், வெங்காயத்தாள் மற்றும் துருவிய சீஸ் முதலியவற்றை சேர்க்கவும். கடைசியாக செஸ்வான் சாஸ் மற்றும் ரெட் சட்னி போட்டுக் கிளறி, தோசையின் மேல் சீஸைத் துருவி விட்டு, வெண்ணெய் சேர்த்து பின்னர் தோசையை நீளவாக்கில் மூன்றாக நறுக்கி, தட்டில் ரோல் செய்து வைத்தால் ட்ரைபாடு தோசை தயார்.

**சிறுதானிய தோசை மாவு தயாரிக்க…**

கேரள சிவப்பரிசியை தேவையான அளவு எடுத்து மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய வகைகளையும் மாவாக அரைத்து இரண்டையும் சரிபாதி விகிதத்தில் எடுத்து பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு, தோசைக்கு மாவுக் கரைசலைத் தயார் செய்துகொள்ள வேண்டும்.

மாவு அரைப்பது சிரமமாகத் தோன்றினால் சிவப்பரிசி மாவும் சிறுதானிய வகைகள் மாவும் இரண்டுமே கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி உப்பு, தண்ணீர் சேர்த்து தயார் செய்யலாம். இரவு தோசை ஊற்றப்போவதாக இருந்தால் காலையிலேயே மாவுக் கரைசலை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் புளிப்புத் தன்மை ஏற்பட்டு, தோசையின் சுவை பிரமாதமாக இருக்கும்.

**ரெட் சட்னி தயாரிக்க…**

கடாயில் சிறிதளவு எண்ணெய்விட்டு சூடான வுடன் தேவையான அளவு பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காயைச் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிவைத்த பெரிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதங்கியதும் அதில் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதளவு வெல்லம் மற்றும் சுவைக்கேற்ப புளி சேர்த்து கிளறி இறுதியாக காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு சேர்த்து இறக்கினால் ரெட் சட்னி செய்வதற்கான மசாலா கலவை தயார். மிக்ஸியில் சட்னிக்குத் தேவையான அளவு பொட்டுக்கடலையைச் சேர்த்து அத்துடன் தயார் செய்துவைத்த மசாலா கலவையைக்கொட்டி அரைத்தெடுத்தால் வகை வகையான தோசைகளுடன் சேர்க்கும் ரெட் சட்னி தயார்.

**[நேற்றைய ரெசிப்பி: பாவ் பாஜி தோசை](https://www.minnambalam.com/public/2021/08/20/1/paav-baji-dosa)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *