மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 19 செப் 2021

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

இந்திய ஆட்டோமொபைல் இத்தனை ஆண்டுகளாகக் கடும்போட்டி கொடுத்து வந்த பன்னாட்டு கார் தயாரிப்பு நிறுவனங்கள், தற்போது திக்குமுக்காடி வெளியேற ஆரம்பித்திருக்கின்றன. ஹார்லி டேவிட்சன், ஜெனரல் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியேறிய பிறகு, தற்போது ஃபோர்டு நிறுவனமும் வெளியேறியிருக்கிறது.

கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக ஃபோர்டு நிறுவனத்தின் வாகன விற்பனை கடுமையாகச் சரிந்தது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் பத்தாண்டுகளுக்கு முன்பு 3.9 சதவிகித சந்தையை வைத்திருந்த ஃபோர்டு, தற்போது 1.38 சதவிகித சந்தையை மட்டுமே வைத்திருக்கிறது. 200 கோடி டாலர் அளவுக்கு நஷ்டம் அடைந்திருக்கிறது. சந்தையில் போதிய வரவேற்பு இல்லாததால், மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த முடியவில்லை என அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

சென்னை ஆலை 350 ஏக்கரில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. தவிர, குஜராத்தில் சனாந்திலும் ஒரு தொழிற்சாலை உள்ளது.

ஃபோர்டு இந்தியாவிலிருந்து வெளியேற முக்கிய காரணம் என்ன... ‘‘வேலை நடக்க வேண்டும் என்பதைவிட அந்த வேலை எப்படி நடக்க வேண்டும் என புராசஸ் இருக்கும். அந்த புராசஸின் அடிப்படையில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஃபோர்டு. ஆனால், கொரிய நிறுவனங்கள் சிக்கனம் மற்றும் வேகப்படுத்துதலுக்கு முன்னுரிமை தரும். ஹூண்டாய் ஆலை 28 மாதத்தில் செயல்படத் தொடங்கி முதல் கார் வெளியானது. ஆனால், ஃபோர்டு நிறுவனத்தின் கட்டுமானம் முடியவே 36 மாதங்கள் ஆகின.

ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்கள் என்ட்ரி நிலையில் அதிக கவனம் செலுத்தின. ஆனால், ஃபோர்டு நடுத்தர மற்றும் உயர் நடுத்தர நிலையில் உள்ள மக்களுக்காகச் செயல்பட்டது. ஃபோர்டில் ஆரம்பநிலை காரை வாங்குவதற்கு மற்ற நிறுவனத்தில் நடுத்தர விலை காரை வாங்க முடியும்.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஒவ்வொரு பிரிவிலும் காரை வாங்கக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். அவர் அனைவருக்கும் ஏற்ற வகையில் பல மாடல் கார்கள் இருக்க வேண்டும். ஆனால், ஃபோர்டில் குறைந்த மாடல்கள் மட்டுமே உள்ளன. புதிய மாடல்களை அறிமுகம் செய்வதில் கடந்த காலத்தில் போர்டு நிறுவனம் அதிக கவனம் செலுத்தவில்லை. கார் வாங்க வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர் மற்ற ஷோரூம்களுக்கு சென்றால், ஏதாவது ஒரு காரை வாங்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஃபோர்டில் வாய்ப்புகள் குறைவு.

இதைவிட முக்கியமான காரணம், இந்திய வாடிக்கையாளர்களை அந்த நிறுவனம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. மற்ற கார்களில் இண்டிகேட்டர் மற்றும் வைப்பர் ஒரே இடத்தில் இருக்கும். ஆனால், ஃபோர்டில் இடம் மாறி இருக்கும். அதேபோல, டிக்கியைத் திறப்பதற்கு டிரைவர் சீட்டுக்குக் கீழே லிவர் இருக்கும். ஆனால், ஃபோர்டில் இடதுபுறம் உள்ள இருக்கைக்கு கீழே லிவர் இருக்கும். தனியாக ஒருவர் ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார் எனில், டிக்கியைத் திறக்க ஒவ்வொரு முறையும் இறங்க வேண்டியிருக்கும். மேலை நாடுகளில் பெரும்பாலான கார்களில் இடதுகை பக்க டிரைவிங் என்பதால் இந்தப் பிரச்சினை பெரிதாக தெரியாது.

இந்தியாவில் காம்பேக்ட் எஸ்.யு.வி என்னும் பிரிவில் பெரிய சந்தையை வைத்திருந்தது. அதைத் தக்கவைத்துக்கொள்ள ஃபோர்டு நிறுவனத்தால் முடியாமல் போனதற்குக் காரணம், இந்திய சந்தைக்கேற்ப ஃபோர்டு நிறுவனம் தன்னை மாற்றிக்கொள்ளாததுதான். இதை உணர்ந்து, புரிந்துகொள்வதற்குள் மற்ற பிராண்ட்டுகள் சந்தையைப் பெரிய அளவில் பிடித்துவிட்டன. ஃபோர்டு வாகனம் தரத்தில் எந்தக் குறையையும் வைக்கவில்லை. ஆனால், அதை இந்திய தன்மைக்கு ஏற்ப மாற்றவில்லை.

சென்னையில் உள்ள ஃபோர்டு ஆலை பாதி உற்பத்தித் திறனை அடைந்தவுடன் 100 கோடி டாலர் முதலீடு செய்து வேறு ஆலையை அமைத்தது. வேறு எந்த நிறுவனமும் செய்யாத அதிரடியான முடிவு இது. இவ்வளவு பெரிய முதலீடு செய்தாலும் இதனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஒரு கார் தயாரித்தாலும், ஒரு லட்சம் கார் தயாரித்தாலும் நிறுவனத்தின் நிரந்தர செலவு அதிகமாகவே இருந்ததால், ஃபோர்டு நிறுவனத்தால் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை’’ என்கிறார்கள் இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள்.

‘‘ஹூண்டாய் நிறுவனம் வெற்றியைக் கட்டாயம் அடைய வேண்டிய நிலையில் இருந்தது. ஆனால், ஃபோர்டு பெரிய வெற்றியைச் சுவைத்த பிறகு இந்தியாவுக்கு வந்தது. அதன் முதல் சிக்கல், அமெரிக்க கலாச்சாரம். அந்த கலாச்சாரம் இங்கு வெற்றி அடையவில்லை. ஹூண்டாயில் பெரிய குழு இங்கேயே இருந்து இந்திய வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை ஆராய்ந்துகொண்டே இருக்கும். ஆனால், ஃபோர்டில் ஒரு குழு இங்கு இருந்தாலும், ஆசிய பசுபிக், ஐரோப்பா என சர்வதேச அளவில் இருந்து சிந்தித்துச் செயல்பட்டதால், இந்திய சந்தையின் தேவையை அந்த நிறுவனத்தால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

கார்களில் பெரிய வேரியன்ட்டுகளை ஃபோர்டு கொண்டு வரவில்லை. மாடல்களைப் பொறுத்தவரை, அவர்கள் டைனமிக்காகச் செயல்படவில்லை. மற்ற நிறுவனங்களைப் போல, சீரான மார்கெட்டிங் உத்தியைக் கடைப்பிடிக்கவில்லை. இதைவிட, ஃபோர்டு கார் விலை இந்தியர்களுக்கு ஏற்றதாகவும் இல்லை. தொழில் உத்திகளை விட சந்தையைப் புரிந்துகொள்ளாதது பெரிய சிக்கல்’’ என்று தன் கருத்தைத் தெரிவித்துள்ளார் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆரம்பக்காலத்தில் மனிதவள துறையில் பணியாற்றிய டாக்டர் ஆர்.கார்த்திகேயன்.

‘‘கார்களைப் பொறுத்தவரை, இந்தியா மிகப்பெரிய சந்தை. ஒவ்வொரு பிரிவிலும் பல வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்துகொள்ளாமல், தங்களிடம் இருக்கும் தயாரிப்புகளை விற்கும் முயற்சியில் ஃபோர்டு இறங்கியது வருந்தத்தக்கது. ஒரு கார் ஒரு டீலர்ஷிப்பிடம் சராசரியாக 21 நாட்கள் மட்டுமே இருக்கும். அதற்குள் விற்பனையாகும். (கோவிட் காலத்தில் அதிக காலம் இருந்தது.) ஆனால், ஃபோர்டு நிறுவனத்தின் பல கார்கள் அதன் ஷோரூம்களில் 50 நாட்கள்கூட விற்பனையாகாமல் இருந்தன. அவர்களிடம் இருக்கும் கார்களுக்கான வாடிக்கையாளர் குறைவாக இருந்ததே இதற்கு காரணம். என்ட்ரி நிலை கார்களுக்கு சந்தை இருக்கிறது என்பது தெளிவான பிறகு, பிகோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இதன் விலை மிக அதிகம். உயரமானவர்கள் இந்த காரை ஓட்டுவது அசௌகர்யமாக இருந்தது. ஃபோர்டு கார்கள் தரத்தில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால், இந்திய வாடிக்கையாளர்கள் விலையிலும் கவனமாக இருப்பார்கள். இந்திய வாடிக்கையாளர்களைப் புரிந்துகொள்ளாத மேலும் சில நிறுவனங்கள் உள்ளன. இதே போக்கைக் கடைப்பிடித்தால் அந்த நிறுவனங்களும் இந்தியச் சந்தையில் இருந்து வெளியேறும் சூழல் உருவாகும்" என்று ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற காரணங்களைச் சொல்கிறார்கள் ஆட்டோமொபைல் துறை சார்ந்த வல்லுநர்கள்.

-ராஜ்

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

ஞாயிறு 19 செப் 2021