tகொலை குற்றச்சாட்டு: சிறுவர்கள் அதிகரிப்பு!

public

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் கொலைக் குற்றங்களில் குற்றஞ்சாட்டப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் தினமும் 77 பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகவும், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக பதிவான பெருநகரங்களில் தமிழ்நாட்டின் கோவை மாவட்டம் முதல் இடத்தையும், சென்னை மாவட்டம் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது என்று சமீபத்தில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில்,” கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த 1603 கொலைகளில் 48 கொலை சம்பவங்களில் சிறுவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டில் 53 ஆகவும், 2018ஆம் ஆண்டில் 75 ஆகவும், 2019ஆம் ஆண்டில் 92 ஆகவும், 2020 ஆம் ஆண்டில் 104 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் 2019-2020 ஆண்டுகளில் நடந்த மொத்த கொலைகளின் எண்ணிக்கை 1,745லிருந்து 1,661 ஆகக் குறைந்துள்ள நிலையில், சிறுவர்கள் குற்றம் சாட்டப்படும் வழக்குகளின் எண்ணிக்கை 92 லிருந்து 104 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இது தேசிய அளவை விட மூன்று மடங்கு அதிகம். இந்தியளவில் 2016ஆம் ஆண்டு கொலைக்குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை 2.9% ஆக இருந்தது. இது 2020ஆம் ஆண்டில் 2.6% ஆக குறைந்துள்ளது.

கொலை சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் தமிழ்நாடு(16.4%) நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த வரிசையில் டெல்லியில் 12.1%, குஜராத் 6.7% மற்றும் மத்தியப் பிரதேசம் 6.4% ஆகவும் பதிவாகியுள்ளது.

இந்த எண்ணிக்கை தமிழ்நாட்டை விட மற்ற மாநிலங்களில் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில், சென்னை, மதுரை, திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக கொலை சம்பவங்களில் சிறுவர்கள் பெயர்கள் சேர்க்கப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறுவர்கள் குறித்தான தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் இந்த அறிக்கை மிகவும் கவலையளிக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமைக் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆண்ரூ சேசுராஜ் கூறுகையில், “சமூக விரோத சக்திகள் குழந்தைகளைக் குறிவைத்து சுரண்டலில் ஈடுபடுவது இதன்மூலம் தெளிவாகிறது. செல்போன் வாங்குவதற்கும், பைக் வாங்குவதற்கும் சிறுவர்கள் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. ஆனால் கொலைக் குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது கவலைக்குரியது” என்று கூறினார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *