Uகிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு

public

அதிரசம், முறுக்கு, தட்டை, லட்டு எனத் தீபாவளிக்கு வழக்கமாகச் செய்யும் பட்சணங்கள் இருக்கட்டும். புதுமையான சில இனிப்புகளை நாமே செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்தால், நமக்குக் கிடைக்கும் பாராட்டே ஸ்பெஷல்தான். அதற்கு இந்த மோத்தி லட்டு உதவும்.

**என்ன தேவை?**

**பூந்தி செய்ய…**

கடலை மாவு – ஒரு கப்

கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை

தண்ணீர் – தேவையான அளவு

நெய், எண்ணெய் – தேவையான அளவு

**பாகு செய்ய…**

சர்க்கரை – முக்கால் கப்

தண்ணீர் – ஒரு கப்

ரோஸ் வாட்டர் – 2 டேபிள்ஸ்பூன்

வெள்ளரி விதை – 2 டேபிள்ஸ்பூன்

**எப்படிச் செய்வது?**

கடலை மாவுடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் பஜ்ஜி மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். இதனுடன் கேசரி பவுடர் சேர்த்துக் கலக்கவும். வாணலியில் நெய், எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றிக் காயவைக்கவும். எண்ணெய்க்கு நேராக பூந்திக் கரண்டியை வைத்து மாவை ஊற்றி, அதன் கைப்பிடியை நன்கு தட்டவும். பூந்திகள் எண்ணெயில் விழுந்து ஓசை அடங்கி மிதக்க ஆரம்பிக்கும்போது எடுத்து வடியவிடவும்.

சர்க்கரையுடன் தண்ணீர் சேர்த்து, பிசுக்குப் பதத்துக்குப் பாகு வரும் வரை காய்ச்சவும். இதனுடன் ரோஸ் வாட்டரைச் சேர்க்கவும். அடுப்பைச் சிறுதீயில் வைத்து பூந்திகளைச் சேர்த்துக் கிளறவும். பூந்தி சர்க்கரையுடன் சேர்ந்து நன்கு சுருண்டு வரும்போது கையைத் தண்ணீரில் நனைத்துக் கொஞ்சம் பூந்திகளை எடுத்துப் பிடித்துப் பார்க்கவும். லட்டு போல் பிடிக்கவந்தால் அதுதான் சரியான பதம். உடனே இறக்கி, வெள்ளரி விதை சேர்த்துக் கிளறி மூடி ஆறவிடவும். கைபொறுக்கும் சூடு வந்ததும் லட்டுகளாகப் பிடிக்கவும். நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குப் பிறகு பரிமாறவும்.

**[நேற்றைய ரெசிப்பி: ஈஸி மதுரா பேடா](https://www.minnambalam.com/public/2021/11/02/1/Madhura-paeda)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *