மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 26 நவ 2021

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

திருவள்ளூரில் ஓடும் ரயிலில் சாகசம் செய்த மாணவர்களை நேரில் அழைத்து அம்மாவட்ட எஸ்.பி அறிவுரை வழங்கியுள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து மற்றும் ரயில்களில் படிகளில் தொங்கியபடியே விபரீத முறையில் பயணம் செய்வதைப் பார்த்திருக்கிறோம். தற்போது மாணவிகளும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளதை சமீபத்தில் வெளியான வீடியோ சுட்டிக்காட்டுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைபேட்டையில் இருந்து ரயில் மெதுவாகப் புறப்படுகிறது. அப்போது பள்ளி சீருடை அணிந்த மாணவி ஒருவர் வேகமாக ஓடி வந்து ரயிலில் ஏறி கம்பியை பிடித்தபடியே தொங்கிகொண்டு செல்கிறார். மேலும், ரயிலில் வேகம் அதிகரிக்க தொடங்கியதுடன் தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகசம் செய்கிறார். இவருக்கு பின்னால் மாணவர் ஒருவரும் இதைப் போன்று செய்கிறார்.

இதை ரயிலில் பயணம் செய்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வீடியோ வைரலானதையடுத்து, இதுதொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அந்த வீடியோவில் இருப்பவர்களும் அடையாளம் காணப்பட்டது.

இந்த நிலையில் ஓடும் ரயிலில் சாகசம் செய்த மாணவர் மற்றும் மாணவியை அவர்களது பெற்றோர்களுடன் நேரில் வரவழைத்து, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுரை வழங்கினார். அப்போது அவர்களின் எதிர்கால கனவு குறித்து கேட்டபோது, டிஎஸ்பி ஆக வேண்டுமென அந்த மாணவரும், ஐபிஎஸ் ஆக வேண்டுமென அந்த மாணவியும் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்து மற்றும் ரயிலில் அபாயகரமாக பயணம் செய்வது தெரியவந்தால் அதுகுறித்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரியின் பிரத்யேக தொலைபேசி எண்ணில் (6379904848) புகார் தெரிவிக்கலாம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வெள்ளி 26 நவ 2021