மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 4 டிச 2021

சிறப்புக் கட்டுரை: பலவீனங்களின் அடிமையா நீங்கள்?

சிறப்புக் கட்டுரை: பலவீனங்களின் அடிமையா நீங்கள்?

சத்குரு

என்னிடம் புகை பிடிப்பது, கோபப்படுவது போன்ற எனக்கே கூட பிடிக்காத சில பலவீனங்கள் இருக்கின்றன. நான் விரும்பாவிட்டாலும், அவை என்னிடம் இருக்கின்றன. அவற்றை நிறுத்துவதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

பதில்

'எனக்கு இது வேண்டாம்' என்று அதிகமாக சொல்லச் சொல்ல, அது உங்கள் மனதுக்குள் ஆழமாகப் பதிந்துவிடுகிறது. பிறகு அதே உங்கள் மனதை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறது, இல்லையா?

ஒரு பரிசோதனையாக, அடுத்த 10 விநாடிகளுக்கு நீங்கள் குரங்கைப் பற்றி நினைக்கவே கூடாது, சரியா? ம், முயற்சித்துப் பாருங்கள்... உங்கள் மனதில் குரங்குதான் முழுமையாக உட்கார்ந்திருக்கிறது, இல்லையா? இதுதான் மனதின் குணம்.

இப்படிப்பட்ட மனதை வைத்துக் கொண்டு, ஒரே நோக்கோடு உங்களால் எதுவும் செய்ய முடியாது. எனவே மனதின் செயல்பாட்டைப் புரிந்து கொண்டு, பிறகு இந்த மனதை வைத்து என்ன செய்வது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்.

மக்கள் என்னிடம் வந்து, 'நான் புகை பிடிப்பதை விட்டுவிட வேண்டும் என்று விரும்புகிறேன், அதற்கு என்ன செய்ய வேண்டும்?' என்று ஓயாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அதற்கு நான் சொல்வேன், "நீங்கள் எதற்காக புகை பிடிக்க வேண்டும்? உங்கள் உடல் புகைவிடும் இயந்திரம் அல்ல. வாகனங்கள் புகை விடும். ஆனால் உங்கள் உடல் புகை விடாது. புகை பிடிக்க வேண்டாம் என்று நீங்கள் விரும்பினால், புகை பிடிக்க வேண்டாம், அவ்வளவுதானே?" என்பேன்.

அதற்கு அவர்கள் சொல்வார்கள், "இல்லையில்லை. எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருக்கிறது, அதை விட்டுவிட முயற்சிக்கிறேன், ஆனால் பலன் இல்லை".

இது புகை பிடிப்பது அல்லது புகைக்காமல் இருப்பது பற்றிய கேள்வி அல்ல.

ஒரு நாள் ஒரு மனிதர், தன் பக்கத்து வீட்டுத் தோழியுடன் காரில் வெகுதூரம் சென்று, வண்டியை நிறுத்திவிட்டு, திடீரென்று தன் தோழியைக் கட்டிப்பிடிக்க முயற்சித்தார்.

அதற்கு அவருடைய தோழி, "முட்டாளே! என்ன செய்கிறாய்? நீ ஒழுக்கமானவன் என்று நினைத்துதானே உன்னுடன் வந்தேன், இதென்ன பைத்தியக்காரத்தனம்?" என்றார். அதற்கு அந்த மனிதர், "இல்லை. நான் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்" என்றாராம்.

எதையாவது கட்டாயத்தின் பேரில் நிறுத்திவிட்டால், இப்படித்தான் அது வேறொரு வடிவத்தில் வெளிப்பட்டுவிடும்.

இப்போது நீங்கள் புகை பிடிப்பதன் மூலம் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள்? நீங்கள் சோர்வாக உணரும்போது சிகரெட்டில் இருக்கும் நிகோடின் (Nicotin) என்ற ரசாயனப் பொருளின் மூலம் உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறீர்கள் அல்லது முழுமையற்று இருப்பதாக மனதளவில் உங்களை உணர்வதால் இப்போது ஒரு சிகரெட்டை கையில் வைத்துக் கொள்கிறீர்கள்.

சிகரெட் கையில் இருக்கும்போது, உங்களை மேலானவராக, ஒரு தைரியசாலியான ஆண்மகனாக நினைத்துக் கொள்கிறீர்கள். குழந்தைகள்கூட சீக்கிரம் வளர விரும்பினால், புகை பிடிக்கத் துவங்குகிறார்கள், இல்லையா?

ஒரு 10 வயது சிறுவன் தான் ஒரு பெரியவனாக மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கும் போது என்ன செய்கிறான்? ஒரு சிகரெட்டை புகைக்கிறான். புகையை உள்ளே இழுத்து, யார் முகத்திலாவது ஊதும்போது ஓர் முழுமையான ஆண் மகனைப் போல தன்னை உணர்கிறான்.

இன்றைக்கு அப்பழக்கம் பெருமளவில் இல்லாவிட்டாலும், ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் அப்படித்தான் இருந்தது.

இப்ராகிம் என்றொரு சூஃபி துறவி இருந்தார். அவருடைய ஆசிரமத்தில் இருந்த இரு சீடர்கள், அங்கிருந்த தோட்டத்தில் அமர்ந்து சிடுசிடுப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர், 'நான் புகை பிடிக்க விரும்புகிறேன், ஆனால் நாம் ஆன்மீகப் பாதையில் இருக்கின்றோம், இப்போது நான் எப்படி புகைப்பது?' என்று கேட்டார். அதற்கு மற்றவர், 'நானும் புகைக்க விரும்புகிறேன்; எனக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை' என்றார்.

பிறகு அவர்கள் 'குருவிடம் சென்று புகை பிடிக்கலாமா, வேண்டாமா என்று கேட்போம்' என்று முடிவு செய்தார்கள். ஏனென்றால், பழங்காலத்தில் பல சூஃபி ஞானிகள் தொடர்ந்து புகைக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள்.

பிறகு அடுத்த நாள் மாலை, அந்த இரு சீடர்களில் ஒருவர் தோட்டத்தில் அதே இடத்தில் சோகமாக அமர்ந்திருந்தார். மற்றொரு சீடர் புகைத்துக் கொண்டே அவ்விடத்திற்கு வந்தார்.

அதைப் பார்த்த முதலாமவர், 'நீ மட்டும் எப்படி புகைத்துக் கொண்டிருக்கிறாய்? குரு என்னிடம் புகைக்க வேண்டாம் என்று சொன்னாரே' என்றார்.

அதற்கு புகைத்துக் கொண்டிருந்த மற்றவர், 'நீ குருவிடம் என்ன கேட்டாய்?' என்று கேட்டார்.

முதலாமவர், 'தியானம் செய்யும்போது புகைக்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் கூடாது என்று சொல்லிவிட்டார்' என்று சொன்னார்.

அதற்கு இரண்டாமவர், 'அது உன்னுடைய தப்பு. நான் அவரிடம், புகை பிடிக்கும்போது தியானம் செய்யலாமா என்று கேட்டேன், அதற்கு அவர் செய்யலாம் என்று கூறிவிட்டார்' என்றார்.

எனவே புகைப் பழக்கத்தை கைவிட முயற்சிக்காதீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வாழ்க்கையில் விழிப்புணர்வைக் கொண்டு வாருங்கள்.

வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் விழிப்புணர்வைக் கொண்டு வரும்போது, எதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லையோ அதெல்லாம் தானாகவே உதிர்ந்து விடுவதைப் பார்ப்பீர்கள். நீங்களாக விட்டுவிட முயற்சி செய்தால், போராட்டம்தான் மிஞ்சும்.

அப்படியே நீங்கள் பலமாகப் போராடி புகைப்பதை விட்டுவிட்டாலும், கனவுகளில் இன்னும் அதிகமாகப் புகைத்து, உங்களுக்கு நீங்களே பலத்த சேதம் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

உங்களுக்கு விருப்பமான ஒன்றை விட்டுவிட்டால் அது உங்கள் கனவுகளை இன்னும் பெரிதாக ஆக்கிரமிக்கும். பிறகு கனவில் பெரிய சிகரெட்களாகப் புகைப்பீர்கள், இல்லையா? எனவே இது போன்று செய்வது தேவையற்றது.

உங்களை நீங்களே கவனித்துப் பாருங்கள். ஏதோ உங்களிடம் ஒரு குறைபாடு இருக்கிறது. அதனால்தான் இது போன்ற பழக்கங்களை உருவாக்கிக் கொள்கிறீர்கள்.

மனதளவில் இன்னும் சிறிது ஆழமாகச் சென்று உங்கள் தன்மையிலேயே சிறிது விழிப்புணர்வைக் கொண்டு வந்து விட்டால், இது போன்ற விஷயங்கள் அப்படியே உதிர்ந்து காணாமல் போய்விடும்.

மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்….

சிறப்பு கட்டுரை: தாங்கமுடியாத சோகம் உங்களை தாக்கினால்...

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 4 டிச 2021