மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 6 டிச 2021

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

ரூ.6.25 கோடிக்கு தங்கப் பத்திரம் விற்பனை செய்து இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடும் தங்கப் பத்திரம் திட்டம், இந்தியாவில் அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற்றது. இது பத்திர வடிவில் இருப்பதால் பாதுகாப்பாக இருக்கும். ஒருவர் ஒரு நிதியாண்டுக்கு அதிகபட்சம் நான்கு கிலோ அளவு வரை வாங்கலாம். மேலும், முதலீட்டுத் தொகைக்கு 2.5 சதவிகித வட்டி ஆறு மாதத்துக்கு ஒருமுறை முதலீட்டாளர் கணக்கில் செலுத்தப்படும். எட்டு ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள தங்கத்தின் விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும்.

தங்கத்தில் முதலீடு செய்ய விருப்பம் உடையவருக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பாகும். இதற்கு விண்ணப்பிக்க பான் கார்டு கட்டாயமாகும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் நிலையத்தில் கொடுத்து தங்கப் பத்திரம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ரூ.6.25 கோடிக்கு தங்கப் பத்திரம் விற்பனை செய்து இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய அரசின் தங்கப் பத்திரம் திட்ட முதலீடு கடந்த நவம்பர் மாதம் 29ஆம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.4,791 என்று நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.

நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் 13,219 கிராம் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நாமக்கல் கோட்டமானது முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஐந்து நாட்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.6 கோடியே 33 லட்சத்து 32,229 ஆகும். அடுத்தடுத்து வரக்கூடிய தங்கப் பத்திரம் முதலீட்டில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

திங்கள் 6 டிச 2021