கிச்சன் கீர்த்தனா: பிஸிபேளாபாத்


பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு மட்டுமா அட்டவணை... இதோ சமையலுக்கும் ஓர் அட்டவணை. ஒவ்வொரு நாளும் ‘இன்று என்ன சமைப்பது...’ என்பதுதான் இல்லத்தரசிகள் மனத்தில் எழும் கேள்வியே. எதையுமே திட்டமிட்டு செயல்பட்டால் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம். இதோ உங்களது கஷ்டங்களைத் தீர்ப்பதற்காக திங்கள் முதல் ஒவ்வொரு நாளும் ஒரு உணவு என்கிற வரிசையில் திங்கட்கிழமைக்கான சிறப்பு உணவு. இதனால் தினம் தினம் நம் வீட்டில் வெரைட்டி சமையல்தான். அது மட்டுமல்ல... இவை பாரம்பர்யச் சிறப்புமிக்கவை; ஊட்டச்சத்துகள் நிறைந்தவை; அனைவரும் விரும்பி உண்ணக்கூடியவை.
என்ன தேவை?
பச்சரிசி – 250 கிராம்
நெய் - 100 மில்லி
புளி - ஒரு எலுமிச்சைப்பழ அளவு
துவரம்பருப்பு - 200 கிராம்
சாம்பார் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
கொப்பரைத் தேங்காய் - பாதி
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
காய்கறிகள்...
பீன்ஸ் - 4
உருளைக்கிழங்கு - 4
பறங்கிக்கீற்று - சிறியது
கேரட் - ஒன்று
புதினா - ஒரு கைப்பிடி அளவு
முருங்கைக்காய் - ஒன்று
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - ஒன்று
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் தனியா, காய்ந்த மிளகாய், நறுக்கிய கொப்பரைத் தேங்காய் ஆகியவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்து எடுத்துக் கொள்ளவும். புதினாவைச் சிறிது எண்ணெயில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். புளியைத் தேவையான அளவுக்குக் கரைத்துக்கொள்ளவும். அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஒரு பங்குக்கு நான்கு பங்கு தண்ணீர் அளந்து விட்டு குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்கவும்.
காய்களை நடுத்தர அளவில் நறுக்கி வாணலியில் எண்ணெய்விட்டு வதக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு வேகவைக்கவும். காய்கள் சிறிது வெந்ததும் இத்துடன் புளிக்கரைசலைச் சேர்க்கவும். பிறகு இதில் சாம்பார் பவுடர், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்து, காய்கள் வெந்ததும் வறுத்துவைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கிளறவும். பிறகு வதக்கிய புதினாவையும் போட்டுக் கிளறவும். பின்னர் வேகவைத்த சாதம், பருப்புடன் இக்கலவையைச் சேர்த்து நன்றாக மசித்து நெய்விட்டு கிளறவும்.
குறிப்பு
சூடாகச் சாப்பிட இது மிகவும் ருசியுடன் இருக்கும். காய்கள், அரிசி, பருப்பு, புளித் தண்ணர், சாம்பார் பவுடர், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து ரைஸ் குக்கரில்கூட வைத்து இந்த உணவை எளிதாகச் செய்யலாம்.
நேற்றைய ஸ்பெஷல்: உணவின் மூலம் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும்!