மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 12 ஜன 2022

சிறப்பு நேர்காணல்: வளர்ப்பும் வண்ணங்களும்...

சிறப்பு நேர்காணல்: வளர்ப்பும் வண்ணங்களும்...

ஆர்எம்.பழனியப்பன்

1957ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்தவர் ஆர்எம்.பழனியப்பன். சென்னை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். 1991ஆம் வருடம் அமெரிக்காவின் டாமரின்ட் பல்கலைக்கழகத்தில் Advanced Lithography பயின்றவர். 1996ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் Artist in Residency ஆக இருந்தவர்.

Fulbright Grant, Charles Wallace, India Trust Grant உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் உரித்தாக்கியவர். 2009ஆம் ஆண்டு இந்தியன் கலைக்கு இவர் சிறந்த அர்ப்பணிப்பை வழங்கியதற்காக ரசா நிறுவனம் விருது வழங்கி சிறப்பித்தது.

தேசிய விருது, போபால் மற்றும் தைவான் அரசின் விருதுகளையும் பெற்றவர். பல்வேறு சர்வதேச பல்கலைக்கழகங்களில் Print making தொடர்பான பயிற்சி பட்டறை நடத்தியவர். சர்வதேச மற்றும் தேசிய அளவில் மிகவும் முக்கியமான பல்வேறு தொழில்நுட்ப பிரின்ட் கண்காட்சிகளில் கலந்துகொண்டவர்.

இத்தகைய சிறப்புமிக்க கலை படைப்பாளி - ஓவியர் ஆர்எம்.பழனியப்பன் அவர்களுடன் எடுக்கப்பட்ட நேர்காணலை இத்தொகுப்பில் காணலாம்.

தேவகோட்டையில் நீங்கள் வளரும்பொழுது இருந்த அனுபவங்கள் எப்படி உங்களை பாதித்தன? அதைப்பற்றி சொல்லுங்கள்...

என் அப்பா பட காலண்டர் பிரின்ட் செய்யும் சில பெரிய சிவகாசி நிறுவனங்களுக்கு ஏஜென்சியாக இருந்து தொழில் செய்து வந்தார். காலண்டர்களை அச்சிடுபவர்கள் பொதுவாக 100 பட காலண்டர்கள் அடங்கிய ஆல்பம் தயாரித்து தனது ஏஜென்டுகளிடம் வியாபார ரீதியில் ஆர்டர் எடுப்பதற்காகக் கொடுப்பார்கள். அதனால் அவருடைய ஆல்பங்கள் எங்கள் வீட்டில் எப்பொழுதுமே நிறைய இருக்கும்; ஒவ்வொரு வருடமும் 300 புதிய பட காலண்டர்களைப் பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கும். கலைக்கான முதல் அறிமுகம் இத்தகைய காலண்டர்கள் மூலம்தான் எனக்குக் கிடைத்தது.

என்னுடைய தாத்தா இயற்கையிலே ஒரு கலை ரசிகர். எங்கள் குடும்பத்துக்கும் அன்றைய தென் வியட்நாமின் தலைநகரமான சைகோனுக்கும் தொழில்-வர்த்தக ரீதியான தொடர்புகள் மற்றும் நிலப்புலன்கள் இரண்டாம் உலகப்போர் காலத்துக்கு முன்பிலிருந்து 1973 வரை தொடர்ந்திருக்கிறது. அந்தக் கால கட்டங்களில், பல தமிழர்களின் முயற்சியினால் அங்கு மாரியம்மன் கோயில் மற்றும் சுப்பிரமணிய சுவாமி கோயில்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கள் தாத்தாவின் தொடர்பினால், நான் சிறுவனாக இருந்த நேரத்தில் 1960 – 1970 எங்கள் வீட்டிலிருந்து பல கோயில் சார்ந்த கலைப் பொருட்கள் சைகோனுக்குச் செல்லும். அதுவும் எனக்குக் கலைக்கான உந்துதலைக் கொடுத்தது.

என் தாத்தாவுக்கு, கோயில் மற்றும் மரபு சார்ந்த கலைகளில் அதிக ஈடுபாடு இருந்ததால், எங்களுக்கும் கோயில் பாரம்பரியங்களில் அதிகமாக தொடர்புகள் உண்டு. செட்டிநாடு மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள பல கோயில்களுக்கு என் இளம் வயதில் என்னுடைய தாத்தாவுடன் சென்றுள்ளேன். அங்கு இருக்கும் சிற்பங்களைப் பார்க்க எனக்கு மிகவும் ஆனந்தமாக இருக்கும். ஆனால், கலையில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தாலும், அந்தக் கால கட்டத்தில், நான் கலைஞன் ஆக வேண்டும் என்ற ஆசை ஒன்றும் பெரியதாக இல்லை. விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடுதான் சிறு வயதில் தீர்மானித்திருந்தேன். பொதுவாக எனக்கு ஆரம்பக் காலங்களிலிருந்தே வானியல் மற்றும் விண்வெளி மீதான அறிவின் தேடுதல், ஆர்வம் அதிகம்.

1970களில் ‘மஞ்சரி’ என்ற விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றிய மாத இதழ் ஒன்று, தேவகோட்டை பொது நூலகத்துக்கு வரும். அத்தகைய புத்தகங்களைப் படித்ததினாலும், அதன் தூண்டுதலினாலும் நானும் விஞ்ஞானியாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இயற்கையாகவே, கணக்குப் பாடத்திலும், அதுவும் இயற்கணிதம், வடிவியல் போன்ற பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுப்பேன்.

என்னுடைய தாய்மாமன் மகன் ஒருவர், எனது சொந்த ஊரில் கமர்ஷியல் ஓவியராக இருந்தார். எனது பள்ளிப் பருவத்தில் அவர் வேலை செய்வதை கூர்ந்து கவனித்ததுண்டு. எங்கள் குடும்பத்துக்கும் வியட்நாமுக்கும் இடையே வணிக உறவுகள் இருந்தமையால் என் கலை ஆர்வத்தைக்கண்ட என் தாத்தா, அங்கிருந்து ஓவியம் செய்வதற்கான ஜப்பான் மற்றும் பிரான்ஸில் தயாரிக்கப்பட்ட பெயின்ட் மற்றும் பிரஷ்களை வாங்கித் தந்துள்ளார். என்னுடைய 13 வயதிலேயே, பிரெஞ்சு வண்ணங்களையும் நல்ல தூரிகைகளையும் பயன்படுத்தியுள்ளேன்.

எனது தாத்தாவுக்கு உலகப் போருக்கு முன்பு மிக வசதியான குடும்ப சூழ்நிலை இருந்திருந்தாலும், நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் எங்களது குடும்பப் பொருளாதாரம் பின்னடைவுக்கே தள்ளப்பட்டிருந்தது.

பின்னர் கலைக்கல்லூரியில் படித்தது எப்படி?

எனது சொந்த ஊரான தேவகோட்டையில் Pre-University படிப்பில், விஞ்ஞானத்தைத் தேர்ந்தெடுத்தேன். எனக்கு சென்னைக்கு வந்து கட்டடக் கலை படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், சில திருப்புமுனைகளினால் நாம் ஏன் நுண்கலைப் படிப்பைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று நினைத்தேன். பொதுவாக நாட்டுக்கோட்டை நகரத்தார் குடும்பங்களில் அவர்கள் எவ்வளவுதான் கலையை ஆதரித்தாலும் அவர்களுடைய குழந்தைகள் கலைஞர்கள் ஆவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் நல்லவேளை, என் தாத்தாவுக்கு கலைகளின்மேல் இருந்த ஆர்வத்தினால் நான் கலை படிக்க சம்மதித்தார். மேலும் வீட்டுக்கு வருவோரிடையே என்னை மதராஸுக்கு, நுண்கலை படிக்க அனுப்பப் போவதாகச் சொல்வார். நான் சென்னைக்கு வந்து கட்டடக் கலைக்கான தகுதித் தேர்வையும் நுண்கலைக்கான தகுதித் தேர்வையும் எழுதினேன். கலைக்கல்லூரிக்கான தேர்வு நான்கு நாட்களுக்கு நடந்தது. முழு உருவப்படங்கள் (Full Figure), போர்ட்ரெய்ட் (Portrait), டிசைன் (Design) எனப் பல தேர்வுகள் நடந்தன. நான் அதில் தேர்ச்சி பெற்றேன்.

எந்த எண்ணத்துடன் கல்லூரி சேர்ந்தீர்கள்?

நான் கல்லூரியில் சேர்ந்தபோது ஒரு நவீன ஓவியனாகப் போகிறேன் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. நவீனக்கலையைப் பற்றிய எந்த சிந்தனையும் எனக்கு அப்போது இல்லை. நான் ஓவியக் கல்லூரி படிக்கும் ஆரம்பக் காலங்களில் Great Master - ரெம்பிரான்ட் (Rembrandt) போன்ற ஐரோப்பிய ஓவியர்களைப் போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகம். நான் கல்லூரியில் முதல் மூன்றாண்டுகளில், முற்றிலும் மெய்சார்ந்த பாணியில் உள்ள கலையைப் பயின்றேன். முழு உருவம் வரைவதற்கு, எங்களுக்குப் பயிற்சி அளித்தவர் ஆசிரியர் விஜயமோகன். அப்போதுதான் அவர் அமெரிக்காவில் ஓவியத்தில் சிறப்புப் பயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தார். ஒரு வரைபடத்தில் ‘பாசிட்டீவ் மற்றும் நெகட்டீவ் வெளி’யானது (Positive & Negative space) எவ்வளவு முக்கிய தன்மைகள் கொண்டவை என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

முழு உருவம் வரையும்போது, உருவத்தைச் சுற்றியுள்ள பகுதிகளும் அதன் தொடர்புகளும், வரைகின்ற முழு உருவத்தின் தன்மையை மேம்படுத்தும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். கல்லூரியில் இருந்தபோது முதல் இரண்டு வருடங்கள், எனது சுய ஆர்வத்தினால், சீன மற்றும் ஜப்பானிய ஓவியப் பாணியிலும் ஓவியப் படைப்புகளைச் செய்து பார்த்துள்ளேன்.

உங்கள் கல்லூரிக் காலத்தைப் பற்றி...

நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் சென்னை ஏழு கிணறு பகுதியில் எனது தாய்மாமன் மகன் வீட்டில் எனக்கு தனி அறை கொடுக்கப்பட்டு தங்கியிருந்தேன். நான் படிக்கும் காலத்தில் பிரபல ஓவிய ஆசிரியர்கள் தனபால், முனுசாமி, சந்தானராஜ், மூக்கையா, பாஸ்கரன், பெருமாள், ஜானகிராம், தக்ஷிணாமூர்த்தி, விஜயமோகன் போன்றவர்கள் இருந்தார்கள்.

எனக்கு முனுசாமி சார் அவர்களின் ஓவியங்களில் உள்ள ‘பரப்பு-வெளி மற்றும் கோடு’களை (Space & Line) அவர் கையாண்டு இருக்கும் விதம் ஓர் ஈர்ப்பு சக்தியை உண்டு பண்ணியது. அவர் ‘வெளி’யை (Space) அவருடைய ஓவியங்களில் அரூப தன்மையோடு கையாண்டிருப்பார். அதேபோல் பாஸ்கரன் சார் மற்றும் அல்போன்ஸோ சார் ஆகியோர் கோடுகளையும், நிறங்களையும் உபயோகிக்கும் முறை ஒருவிதமான விநோத தன்மை கொண்டதாக இருக்கும். அவர்களுடைய படைப்புகளில் உள்ள உருவங்கள் மரபுசாரா தன்மையைப் பெற்றிருக்கும். ஓவியத்தில் உள்ள பரப்புவெளி, கோடுகள் மற்றும் நிற கலவைகளின் தொடர்புகள் புது விதமான பரிணாமத்தை உணர செய்யும்.

உங்களை ஈர்த்த ஓவியர்கள் யார், யார்?

‘ஓல்டு மாஸ்டர்ஸ்’ (Old Masters) எனப்படும் பண்டைய ஐரோப்பிய ஓவியர்களுடைய படைப்புகள் மிகவும் பிடிக்கும். எனது ஓவியக் கல்லூரி படிப்பில் முன்பகுதியில் செய்த உருவப்படங்கள் சில ஜரோப்பிய ஓவியர்கள் ரெம்பிரான்டின் (Rembrandt) ஓவியத்தைப் போலவே பின்னணி, இருட்டாக இருக்கும். அதனால் என்னைப் பார்த்து ‘ரெம்பிரான்ட்’ என்று கல்லூரியில் சில சக மாணவர்கள் கேலியாக கூட அழைப்பார்கள். எனக்கும் மைக்கேல் ஏஞ்சலோ (Michelangelo), லியனார்டோ டா வின்சி (Leanardo da Vinci), ஆல்பிரெட் டியூரர் (Albrecht Durer), கிளாடு மோனே (Claude Monet), அகஸ்டே ரெனோயர் (Auguste Renoir),

டெகாஸ் (Degas) போன்ற ஓல்டு மாஸ்டர்களின் ஓவியங்களும் எனக்குப் பிடிக்கும். அந்தக் காலகட்டங்களில் எனது ஓவியங்களுக்கும் நான் அதே மாதிரியான பட - சட்டகங்களையும் போட்டுப் பார்ப்பதுண்டு. ஊரிலிருந்து அனுப்பப்படும் பணம் அனைத்தையும் சரியான உணவு, ஆடை என்று ஆடம்பரமாகச் செலவு செய்யாமல் கலை செய்வதற்காக உபயோகித்திருக்கிறேன். இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகுகூட சில ஓல்டு மாஸ்டர்களின் ஓவியங்களைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.

நவீன பாணியாக இருக்கட்டும்; இந்திய பாணியாக இருக்கட்டும்... கட்டடக் கலை என்பதும், பொதுவாக இசை என்பதும் எனக்கு மிகவும் பிடித்தமானது.

ரெம்பிரான்டின் ஓவியத்தில் என்ன உங்களுக்குப் பிடித்தது?

அவருடைய ஓவியங்களில் கண்கள் பேசும். ஒளி பேசும். கித்தானின் பெரும் பாகம் இருட்டாக இருந்தாலும் முகத்தில் ஒளி இருக்கும். உயிர் தன்மை இருக்கும். சில இடங்களில் ஒருவிதமான அதிர்வுகளும் இருக்கும். அவர் ஓர் ஓவியத்தை வரைவதற்கு, பல மாதங்கள் எடுத்துக் கொள்வாராம். அப்படியும் அதில் மலர்ச்சி இருக்கும். ஓவியங்கள் மட்டுமல்ல... அச்சு ஊடகத்திலும், அவர் செய்ததது மிகவும் நேர்த்தியானது; ஓர் ஈர்ப்பு சக்தி கொண்டது.

அதனால்தான் நீங்களும் அச்சுப்பதிவுக் கலையை / பதிப்போவியத்தைத் தேர்ந்தெடுத்தீர்களா?

இல்லை. கலைக்கான தூண்டுதல் என் குடும்பத்தில் புழங்கிய அச்சுப் படங்களிலிருந்துதான் வந்தது. 1970களில் என் அப்பா மதுரையில் Tin Printing தொழில்... அதாவது தகட்டின்மேல் ஆப்செட் முறைப்படி அச்சிடும் தொழில் நிறுவனம் நடத்தி வந்தார். குடும்ப சூழ்நிலை காரணத்தினால் எனது அண்ணாவும், கல்லூரி படிப்பை மதுரையில் பாதியில் நிறுத்திவிட்டு அச்சுத் தொழிலில் இறங்கிவிட்டார். முதலில் Metal Etching, Die Printing செய்தார். பின்னர் Screen Printing அச்சகத்தை நடத்தி வந்தார். இப்போது வளர்ந்து பெரிய அளவில் Offset Printing Industry நடத்தி வருகிறார். பின்னர் என் தம்பியும் அச்சுத் தொழில் நுட்பத்தைப் படித்து சென்னையில் ஒரு பெரிய பிரின்டிங் நிறுவனம் வைத்துள்ளார். அதனால், அச்சு ஊடகத்தின் நுணுக்கங்கள் பல அறியாமலே என்னை பற்றிக்கொண்டது. எனது கல்லூரி நாட்களில் பின் பகுதியிலும், பிறகும் நான் கலை படைப்புகளைச் செய்யும்போதும் பதிப்போவியத்தின் சாராம்சம் முக்கிய வெளிப்பாடாகப் படைப்புகளில் அமைத்து விட்டது.

காலண்டர்களைக் கொண்டு நீங்கள் செய்த கலை படைப்பைப் பற்றி சொல்லுங்கள்...

கல்லூரிப் படிப்பை 1980இல் படித்து முடித்தபிறகு, தேர்வின் முடிவுக்காக காத்துக் கொண்டிருந்தேன். அப்போது என் அண்ணனின் அச்சு தொழிலுக்கு உதவி தேவைப்பட்டதால், மதுரைக்கு என்னை அழைத்தார். என்னுடைய கலைகளைச் செய்வதற்கான எந்தக் கருவிகளும் எதுவும் எடுத்துச் செல்லவில்லை. மாக்ஸ்முல்லர் பவன் வெளியிட்ட ஜெர்மன் கட்டடங்களுடன் கூடிய இயற்கை காட்சி படங்கள் கொண்ட மேஜை காலண்டர் அது. அதை அண்ணனுக்குக் கொடுப்பதற்காக சென்னையிலிருந்து எடுத்துச் சென்று இருந்தேன். படைப்பாற்றுதலின் உந்துதலால் லேசர் பிளேட் வைத்துக்கொண்டு அந்த காலண்டர் மேல் உரசி தேய்க்க ஆரம்பித்தேன். சில அச்சு பதிவான வண்ணங்கள் வெளியேற சில பகுதிகளை வெள்ளை நிறமாக்கினேன். அதேநேரத்தில் என் அண்ணனுடைய அலுவலகத்தில் பழைய தட்டச்சுக் கருவி என்முன் இருந்தது. அதை வைத்து காலண்டரில் நானே பல அரூப எண்களையும் வார்த்தைகளையும் அச்சிட்டேன். பிறகு சில கணிதம் சார்ந்த சித்திர வடிவங்களையும் பல நிறங்கள் கொண்ட Ball Point பேனாக்களை வைத்து பதிவிட்டேன். இவ்வாறு அது யதார்த்தமாக நடந்தது.

நீங்கள் கல்லூரியில் பதிப்போவியத்தைத் தேர்ந்தெடுத்தீர்களா?

இல்லை. ஓவியத் துறையில் படித்தேன். முதல் மூன்றாண்டுகள் அகாடமிக் பாணியில் (Academic Style) வேலை செய்தேன். பின்னர் ஓவியத்துக்குள் உள்ள பலவிதமான தொகுப்புகளை ஒன்றிணைத்து (Composition) செய்ய வேண்டும் என்று வந்த போது எனக்கு என்ன செய்வது என்று சரியாக பிடிபடவில்லை.

ஓல்டு மாஸ்டர்களின் படைப்புகளைப் பார்த்தும் `ஸ்டூடியோ மேகஸின்’ (Studio Magazine) எனப்படும் பிரிட்டிஷ் பத்திரிகையில் வரும் படங்களை வைத்தும் அதிலிருந்து சில ஓவிய தொகுப்புகளை எடுத்துக்கொண்டு என் கற்பனையையும் அதனுடன் ஒன்று சேர்த்து சில வரி வடிவங்களை (Drawing) வரைய ஆரம்பித்தேன். பொதுவாக அந்தக் காலகட்டங்களில் நல்ல லேண்ட்ஸ்கேப் செய்வேன். அதன் அடிப்படையில் இவ்வாறு பல நவீன ஓவிய தொகுப்புகள், நான்காம் ஆண்டில் கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த சிந்தனையுடன் புதிய விஷயங்களைப் படைக்க தொடங்கினேன். ஆனால் என்ன செய்கிறேன், எந்த பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் என்பது எனக்குச் சரியாகப் புரியவில்லை.

அந்த நேரங்களில் நண்பர்களுடன் ஒன்றுசேர மதிய வேளையில் கல்லூரிக்கு அருகில் இருந்த இம்பாலா ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடும் பழக்கம் இருந்தது. பல நேரங்களில் எங்களுடன் சி.பாலசுப்பிரமணியம் (கொம்மை பாலா) என்ற எனது சக தோழரும் வருவார். படிக்கும் காலத்திலேயே அவர் குமுதம், ஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகளுக்கு ஓவியம் வரைவார். அவர் வரையும் உருவங்கள் மிக நுட்பமாகவும் கற்பனை கலந்ததாகவும் இருக்கும். அந்த காலகட்டங்களில் எனக்கு அவ்வளவு நேர்த்தியாக கற்பனைகளை சித்திரிக்க தெரியாது.

அப்படி ஒருநாள் நான், பாலா, ஷாமிலா, மஞ்சுளா, ரசியா டேனி (Prof. Razia Tony, Retr. Head of Fine Arts, Stella Maris College), சேகர் மற்றும் பின்னர் சினிமாவில் புகழ்பெற்ற Special Effect Art Director ஆக உருவாகிய வெங்கியும் உணவு அருந்தச் சென்றோம். செல்லும் வழியில், பாலா தன் பின்புறத்தைத் தடவிக்கொண்டே வந்துகொண்டிருந்தார். `பெண்கள் இருக்கும்போது ஏன் இப்படிச் செய்கிறாய்?’ என்று கேட்டபோது, `எனக்கு ஏதோ கடிப்பது போன்று இருக்கிறது, அதனால்தான்’ என்றார்.

வகுப்பறைக்கு வந்த உடன் இந்த சம்பவத்தை வைத்து, ஒரு வேடிக்கையான வரைவோவியத்தை கற்பனை கலந்து... அவரது பின்புறம் குரங்கின் முகம் மாதிரியாகவும், தடவும் மனிதனின் கையை அது கடிப்பது போன்ற உருவத்தை உடல் நெளிவு மற்றும் வலி தாங்கிய முக வெளிப்பாட்டுடன் வரைந்தார். வார்த்தைகளால் சொன்னதை அவரால் அப்படியே பிம்பமாக மாற்ற முடிந்ததற்கான காரணம், அவரிடம் இருந்த கற்பனையை வெளிப்படுத்த கூடிய திறமையும்தான் என்று எனக்குப் புரிந்தது. இது எனக்கு மிகவும் உத்வேகத்தை உண்டு பண்ணியது.

இந்த நிகழ்ச்சி உங்களுக்கு உணர்த்தியது என்ன?

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

கட்டுரையாளர் குறிப்பு:

வைஷ்ணவி ராமநாதன்

Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூரில் உள்ள சித்ர கலா பரிஷத்தில் நுண்கலை படித்தவர். இப்பொழுது சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதி நேர Art History ஆசிரியராக இருக்கிறார். மின்னம்பலத்தின் வெளியீடான 'உருவங்கள் உரையாடல்கள்' நூலின் ஆசிரியர்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

புதன் 12 ஜன 2022