மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 13 ஜன 2022

சிறப்பு நேர்காணல்: பரிணாமங்களும் பரிமாணங்களும்... பகுதி 2

சிறப்பு நேர்காணல்: பரிணாமங்களும் பரிமாணங்களும்... பகுதி 2

ஆர்எம்.பழனியப்பன்

1957ஆம் ஆண்டு தேவகோட்டையில் பிறந்தவர் ஆர்எம்.பழனியப்பன். சென்னை அரசு கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர். 1991ஆம் வருடம் அமெரிக்காவின் டாமரின்ட் பல்கலைக்கழகத்தில் Advanced Lithography பயின்றவர். 1996ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் Artist in Residency ஆக இருந்தவர்.

சிறப்புமிக்க கலை படைப்பாளி - ஓவியர் ஆர்எம்.பழனியப்பன் அவர்களுடன் எடுக்கப்பட்ட சிறப்பு நேர்காணலின் தொடர்ச்சியை இனி காணலாம்.

இந்த நிகழ்ச்சி உங்களுக்கு உணர்த்தியது என்ன?

உன்னதமான கலை என்பது ஒருவர் கற்றுக்கொடுத்து வெளிவருவது அல்ல. யதார்த்தமாக அது நடக்க வேண்டும். இதேபோல அந்தக் காலகட்டங்களில் (1977-78) மற்றோர் உந்துதல், சாம் அடைக்கல சாமியின் ஓவியங்கள் மூலமாக எனக்குக் கிடைத்தது. அவை மிகவும் உணர்ச்சியுடன் ஒரு சக்தி வாய்ந்த இயக்கத்தின் தன்மையாக இருக்கும். அந்தக் காலத்தில் ‘ஏர்போர்ட் 70’ (Airport 70) போன்ற ஆ‌க்‌ஷன் திரைப்படங்கள் (Action Movies) வந்தன. அவற்றை உள்வாங்கி மிக ஆற்றல் வாய்ந்த கற்பனையுடன், அவர் பிரமாண்டமான ஓவியங்களை வரைவார். பார்த்தவுடன் பிரமிக்க வைக்கும்படியான சக்தி வாய்ந்த ஓவியங்கள் அவை. எங்கள் ஆசிரியர்கள்கூட அவற்றை கண்டு, சற்று பொறாமைப்படுவார்கள். எனக்கு அப்போது (1977-78) நவீன ஓவியம் பற்றிய நுட்பங்கள் அவ்வளவாகத் தெரியாது. நூலகத்தில் பார்த்த நவீன ஓவியங்களின் ஓவியங்கள்கூட என்னை அவ்வளவாக பாதித்ததில்லை. ஆனால், அவருடைய ஓவியங்கள் என்னை முற்றிலும் வசப்படுத்தின. அந்த ஓவியங்கள் பலமுறை தேசிய கண்காட்சியில் பலரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. பல இளைய தலைமுறையினருக்கு அவருடைய உன்னதமான படைப்புகள் இன்னும் தெரியவில்லை.

உங்களுடையதுக்கான உருவ / அருவ மொழி எப்படித் தோன்றியது?

1978ஆம் ஆண்டு. பாலா மற்றும் நண்பர்களுடன் ஹோட்டலுக்குச் சென்ற அதே வாரத்தில் மறுபடியும் சில நண்பர்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிடச் சென்றிருந்தேன். வழக்கமாகச் செல்லும் இம்பாலா ஹோட்டல் அன்று இயங்கவில்லை. அதனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள பிக்னிக் ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.

அந்தக் காலத்தில் திருப்பதியிலிருந்து வரும் பயணிகள் பலர் அங்குதான் மதிய உணவு சாப்பிட வருவார்கள். அவர்களுக்காகவே மேல் தளத்தில் (Mezzanine Floor) உணவு ஏற்பாடு செய்திருப்பார்கள். மேல் தளத்துக்குச் செல்வதற்கு பழங்கால கட்டட அமைப்புகளுடன் கூடிய அழகிய வேலைப்பாடுடன் உலோக கம்பிகளும், மர பலகைகளும் கொண்ட படிக்கட்டுகள், உணவகத்தின் நடுவில் இருக்கும்.

நாங்கள் உணவு அருந்திக்கொண்டிருக்கும் வேளையில், வழக்கம்போல் ஆரவாரத்துடன் பயணிகள் கூட்டம் ஒன்று மேலே சென்றது. அவர்கள் செல்லும் வேகத்தில் அந்தப் படிக்கட்டுகள் உடைந்து பறந்துவிடும் போலிருக்கிறது என்று கிண்டலாக எனது நண்பன் ஒருவனிடம் அப்போது சொன்னேன். இந்த ஒரு சொல், என்னை நிறுத்தி யோசிக்க வைத்தது. மனத்தில் படிக்கட்டுகள் பறக்க தொடங்கின. அதிலிருந்து `பறக்கும் படிக்கட்டு’ (Flying Steps) என்ற தொடர் தலைப்பில் சில ஓவியங்களும் பல வரைபடங்களையும் வரைய ஆரம்பித்தேன்.

எனக்குப் பிடித்தமான கட்டடக் கலை எனது இந்த ஓவியப் படைப்புகளில் பிரதிபலிக்க தொடங்கின. இந்த வரிசையில் எனது முதல் படைப்புக்கு நான் கொடுத்த தலைப்பு... ‘எனது பிறந்தநாளில் நடனமாடும் படிக்கட்டுகள்’ (Dancing Steps on My Birthday) என்று தலைப்பிட்டேன். எனது ஆக்கபூர்வமான படைப்புகளின் பிறந்தநாள் அது. என் படைப்புகளுக்குத் தலைப்பு மிகவும் முக்கியமானது அன்று. பார்வையாளர்கள் படைப்புகளை அணுகுவதற்கு அதன் மூலம் சில குறிப்புகள் கிடைக்கும். ஆனால், அதே நேரத்தில் தலைப்புகள் சில நேரங்களில் ஒருவித கட்டுப்பாடாகவும் அமையலாம். அதனால் படைப்புகளுக்குப் பெயர்வைக்கும் தருணத்தில் கற்பனை கலந்த சில அருவ சிந்தனைகளை வைப்பது எனக்குப் பிடிக்கும்.

Flying Steps என்ற தொடர் தலைப்பில் பல படைப்புகளை 1980களில் செய்தேன். அப்படிச் செய்து கொண்டிருந்தபோது ‘ஏன் அது பறக்கிறது?’ என்ற கேள்வி எனக்குள்ளேயே எழுந்தது. காற்றில் உள்ள சக்தியின் அடர்த்தி (Density), ஈர்ப்பு சக்தி (Gravity) பற்றிய எண்ணங்கள் எழத் தோன்றின. இந்த விதத்தில் நான் அறிவியல் சார்ந்த சிந்தனைகளுடன் என் கலைப் படைப்புகளை வரையத் தொடங்கினேன். நான் படைக்கும் எல்லாவற்றிலும் பறக்கும் தன்மையும் அதன் உணர்வுகளும் இருந்தது. ஆனாலும் எனக்குப் பெரிய திருப்தி ஒன்றும் அன்று கிடைக்கவில்லை. பின்னர் விமானங்களை மையமாகக் கொண்டு ஓவியம் வரைய ஆரம்பித்தேன். விமானத்தின் கண்டுபிடிப்பு, ‘அறிவியலின் மறுமலர்ச்சி’.

விமானத்தின் மேல் உள்ள பிடிப்பினாலும் அதன் பறக்கும் இயக்கத்தின் உள்ள அழகுணர்வினாலும், இரண்டாம் உலகப்போர் சம்பந்தமான பல படங்களைப் பார்த்திருந்தேன். அதன் பாதிப்பும் எனக்குண்டு. நான் முதலில் பார்த்த படம் ‘பெர்லினின் வீழ்ச்சி’ (Fall of Berlin) என்ற ஆங்கில வசன வரிகள் கொண்ட ரஷ்யத் திரைப்படம். தேவகோட்டையில் லஷ்மி தியேட்டரில் 13 வயதில் பார்த்தேன். யார் யாருடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் அன்று அவ்வளவாகத் தெரியாது. மிக நீண்ட திரைப்படம் அது. திரைப்படம் முழுவதும் குண்டு வீச்சும் தோட்டாக்களும்தான். பலவிதமான போர் விமானங்கள் வானத்தில் பறக்கும்.

அடுத்து பார்த்த படம் ‘Red Sea’. முதலாம் உலகப்போர் சார்ந்தது. இந்தப் படங்களில் இருந்த ராணுவ சம்பந்தமான நிகழ்ச்சிகளும், நில வரைபடத்தின் மீது தாக்கமும் (Mapping) மற்றும் சண்டைக் காட்சிகளும் என்னை மிகவும் பாதித்தன. அதேபோல் வெள்ளித்திரையின் எல்லைக்குள் விமானத்தின் நடமாட்டத்தை (Movement within the Confined Space) பார்ப்பதும் என்னைக் கவர்ந்தது. மனதில் இந்த அதிர்வுகளுடன் சென்னைக்கு வந்த பிறகு இன்னும் பல போர் சம்பந்தமான திரைப்படங்களைப் பார்த்தேன். Science-fiction படங்களையும் பார்க்கத் தொடங்கினேன். சில உண்மை நிகழ்ச்சிகளை மையமாக வைத்து எடுக்கும் திரைப்படங்களைப் பார்ப்பதும் உண்டு.

இவையெல்லாம் சேர்ந்து, பறப்பதைப் பற்றியும் விமானத்தை இயங்கவைக்கும் உட்புற கருவிகளைச் சார்ந்த சாதனங்களின் இயக்கங்களின் விழிப்புணர்வும், பறக்கும் உயிர் தன்மையும் என் படைப்புகளில் வெளியாயின. எல்லாரும் விமானத்தைப் பொதுவாக வாகனப் பொருளாக மட்டுமே பார்ப்பார்கள். ஆனால், எனக்கு அதைவிட அந்த விமானத்தைப் பறக்க வைக்கும் வழிமுறை சக்திதான் அழகாகப்பட்டது. அது புதிய விதமான அழகுணர்வையும் ஏற்படுத்தியது.

விமானம் அதற்குள் இருக்கும் முழு அறிவியல் சிந்தனை மற்றும் மைக்ரோ சிப், மின்னணுவியல் கருவிகளின் உயிர் சார்ந்த (Active Engines) பாகங்களை என் படைப்புகளில் சித்திரிக்கத் தொடங்கினேன். 1978 - 79இல் ‘Flying Machine / Flying Skeleton’ என்ற சிந்தனையில் சில படைப்புகளையும் வரைந்தேன். இதற்குச் சற்று முன்னர், மற்ற கலைக் கல்லூரி மாணவர்களைப்போல் நாங்களும் நிறைய சுற்றுலா பயணங்களுக்குச் செல்வோம். அப்படிப் போகும்போது எனக்கு Landscape அடிப்படையாகக்கொண்டு, வரி வடிவியலில் சார்ந்த பல குறிப்புகளை எனது வரை புத்தகத்தில் பதிவிட்டேன். கிராப் பேப்பர்களை எனது படைப்புகளில் உபயோகிக்கவும் தொடங்கினேன்.

இந்தத் தருணத்தில் நான் அமெரிக்கன் சென்டர், ரஷ்யன் சென்டர், மாக்ஸ்முல்லர் பவன் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில், அலையன்ஸ் பிரான்சைஸ் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கும் திரைப்படக் காட்சிகளுக்கும் செல்வேன். இப்படி நானும் என் நண்பர்களும் ஒரு ரஷ்ய திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தோம். நிகழ்ச்சிக்குப் பிறகு, அன்று பார்த்த ரஷ்யன் திரைப்படத்தில், ராணுவ வீரர்களின் அணிவகுப்புகளையும் பள்ளி குழந்தைகளின் கூட்டு உடற்பயிற்சியில் நடந்த வண்ணச் சேர்க்கை, அதன் மாற்றங்களின் தன்மை மற்றும் அசைவுகளின் பற்றியும் நிகழ்ச்சியின் வடிவமைப்புகள் பற்றியும் சித்திரித்து, முடிந்த போன சிறிய பேருந்து பயணச் சீட்டின் மடிப்புக்கிடையில் வரைந்து காண்பித்தேன். மிகச்சிறப்பாக இருந்த அந்த அசைவுகளும் அந்தப் பயணச் சீட்டின் வரைபடமும் என் கற்பனையைத் தூண்டி கணித சார்ந்த அமைப்புகளுடன் ஓவிய அமைப்புகளாகப் பயணிக்க தொடங்கின. முதன்முறையாக என் மனத்தில் நான் வரைந்த வரைபடம் எனக்கு பரவசத்தை ஊட்டியது. எனக்கு எவ்வளவுதான் ஓல்டு மாஸ்டர்ஸின் ஓவியம் பிடித்திருந்தாலும், அனுபவரீதியாக நான் அணுகியிருந்தாலும் என்னுடைய அந்தப் படைப்புகளில் உள்ள அழகியல் முற்றிலும் வேறுபட்டது என்பதை அன்று புரிந்துகொண்டேன்.

எல்லாவற்றிலும் கண்ணுக்குப் புலப்படாத அழகியல் சார்ந்த வரைபடம் / ஓவிய கூறுகள் (invisble Aesthatics) இருக்கிறது. நமது நகர்வுகளில், பேசுவதில், நம் கற்பனையில் எல்லாவற்றிலும் அது உள்ளது. கண்ணுக்குப் புலப்படாத இந்த அனுபவ வரைபடம், பார்ப்பதற்கும் தொடுவதற்கும் உள்ள வரைபடத்தைவிட முக்கியமானதாக எனக்கு அன்று தென்பட்டது.

இந்தக் கண்ணுக்குப் புலப்படாத வரைபடத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...

நீங்கள் தினமும் காலையில் எழுந்து பலவிதமான வேலைகளில் ஈடுபடுகிறீர்கள், வெளியில் செல்கிறீர்கள், மறுபடியும் மாலையில் வேலைகளை முடித்துத் திரும்பி வருகிறீர்கள். அது தினசரி நிகழும் நிகழ்வு. ஆனால், உங்கள் தினசரி நடவடிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது, உடல் இயக்கத்தின் அசைவுக்கும், நகர்வுக்கும் (Physical Movement) மனம் மற்றும் உளவியல் சார்ந்த இயக்கத்துக்கும் மத்தியில் ஒருவிதமான புதிய அசைவு மற்றும் அதிர்வு இருக்கிறது என்பதை உணர்கிறீர்கள். அதுதான் ஒருவிதமான கண்ணுக்குப் புலப்படாத வரைபடமான அதிர்வும் அசைவும்.

உடல் அளவில் நாம் செய்யும் அசைவைப் புகைப்படம் மற்றும் காணொலியை வைத்து பதிவு செய்யலாம். மன அளவிலான அசைவையும் அதிர்வையும் நாம் கற்பனையில் பதிவிடலாம். ஆனால், இதற்கு இடையில் நடக்கும் கண்ணுக்குப் புலப்படாத அசைவுக்கும், நகர்வுக்கும், அதிர்வுக்கும் எந்தப் பதிவும் கிடையாது. அந்த இயக்கத்தின் அசைவும், நகர்வும், அதிர்வும் பெளதீகம், இயற்பியல் மற்றும் உளவியல் சார்ந்து ஒன்றிணைந்த தன்மை கொண்டதாக இருக்கின்றன. அவைதான் என் படைப்புகளில் பிம்பங்களாக உருவாக்க விரும்புகிறேன்.

ஒரு காலத்தில் இதை வெளிப்படுத்துவதற்காக முத்திரைகளும், எண்களும், அருவ / உருவ பொருட்கள் என்று வெவ்வேறு கூறுகளில் உபயோகித்தேன். ஆனால், இப்போது அதைப் பதிவு செய்வது எப்படி என்பதைப் புரிந்துகொண்டு எனது படைப்புகளை செய்து வருகிறேன்.

இந்தப் படைப்புப் பயணத்தின் முடிவு என்ன என்பது உங்களுக்குச் சரியாக விளங்கிவிட்டதா அல்லது இதுவும் ஒரு தேடலா?

அது எப்போதுமே ஒரு தேடல்தான். இயற்பியல் மற்றும் பெளதீக ரீதியில் நாம் எல்லோரும் இங்கு தனித்தனியாகவும், கூட்டு அணுக்களாகவும் இருந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரு விதத்தில் நாம் இங்கு இல்லாமலும் இருக்கிறோம். நமக்கு பதிலாக ஒரு `வெளி’ (Space) இருக்கிறது. அதேபோல் இயக்கத்தின் செயலாக அதிர்வுகளும், நகர்வுகளும், அசைவுகளும் இருக்கின்றன. அதுதான் யதார்த்தமான உண்மை (Reality). நீங்களும் நானும் இந்த உருவத்தில் இருப்பது உண்மையானதாகக்கூட இல்லாமலும் இருக்கலாம். இதுவும் ஒரு Reality தான். ஆனால், யதார்த்தமான உண்மை (Reality) என்பது இயக்கத்தின் அதிர்வும், நகர்வும், அசைவும்தான். அந்த இயக்கத்தின் உணர்வுகள், என் படைப்புகளில் கொண்டுவர முயற்சி செய்கிறேன். என் படைப்புகளில் அவை சுருக்கமாகவும், அரூபமாகவும் உள்ளன.

இதை இன்னும் சற்று விவரிக்க முடியுமா?

1980களின் முன்பகுதியில் என்னுடைய முதல் இளைய சகோதரர் (இப்போது American Citizen) என்னுடன் இருக்கும் காலங்களில் காலம் - இடம் - வெளி பற்றிய சிந்தனை பரிமாற்றங்கள் அவருடன் செய்தது உண்டு. 1984-88களுக்கு இடையில் ‘ஆவணம்’ என்ற தொடர் தலைப்புகளில் (Document Series) பல படைப்புகள் செய்துள்ளேன். அந்தப் படைப்புகளில் பலவற்றில் மேல் பாகத்தை அறிய படாத காட்சிகள் மற்றும் விவரங்களாக (Unknown Fact & Impression) பதிவிட்டு கறுப்பு - வெள்ளை நிறங்களை வைத்து வெளிப்படுத்தியுள்ளேன். அறியாத ஒன்றைக் குறிப்பிடுவதினால் அதற்குக் கறுப்பு - வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தினேன். கீழ் பாகத்தில் இயற்கையின் நிலப்பரப்புகளை பறவையின் பார்வையில் சித்திரித்து நாம் அறிந்த, உணர்ந்த காட்சிகளாகவும் அனுபவங்களாகவும் (Known Fact) கற்பனை கலந்த சிந்தனையுடன் (Known & Unknown) என்று பிணைந்துள்ளேன்.

பொதுவாக அவை அனைத்தும் வரைவுருவ ஓவியங்களில் (Graphics) செய்யப்பட்டிருந்ததால் காலம், இடம், வெளி என்பவற்றை உணர்த்துவதற்காக ஒவ்வொன்றிலும் பல மாற்றங்கள் செய்து, வெவ்வேறு சாயலாகப் படைத்துள்ளேன். இந்தப் படைப்புகளைச் செய்யும்போது, நான் கீழிருந்து மேற்பகுதிக்கு சித்திர அருவக் கோடுகளாக, சுதந்திரமான உணர்வுகளுடன் வரைந்து பதிவிட்டுக் கொண்டு செல்வேன். இயக்கத்தின் செயலான அதிர்வு, அசைவு, நகர்வுகளுக்கான தன்மையைத் தவிர அதில் வேறொன்றும் கிடையாது. அந்த நேரத்தில் எனக்குப் புரிந்தது ஒன்று, இந்தப் பிரபஞ்ச வெளிக்கும் (Universal Space), நாம் அறிந்த, உணர்ந்த இயற்பியல் மற்றும் பெளதீக அனுபவ வெளிக்கும் (Physical Space) மத்தியில் நிறங்கள் அதிகம்.

பல நிறங்கள் கொண்ட அதிர்வும், அசைவான பலவித இயக்கங்கள் கொண்ட ஒரு வெளி (Space) உள்ளது. கண்ணுக்குப் புலப்படாத அந்த வெற்றுவெளியில் இயக்கத்துடன் கொண்ட நிறைய உயிர்களும் உண்டு. அந்த உயிர்ப்பியல் வெளியை (Organic Space - 1996) நான் பதிவிட விரும்பினேன். எல்லாவற்றுக்கும் ஓர் ஆரம்பமும், ஓர் முடிவும் உண்டு என்பதை ஒரு சராசரி மனிதனாகப் பார்த்திருந்தாலும் முடிவற்றது (Infinity) என்பதைப் பற்றி நான் எப்போதும் சிந்திப்பது உண்டு. அது ஒரு நூதனமான அறிவின் தேடல்தான்.

இதன் தொடர்பாக, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத வெளியை (Invisible space) பதிவு செய்ய முயன்றது மாதிரியாக, இந்த அண்டவெளியில் உள்ள கண்ணுக்கு புலப்படாத இயக்கத்தின் அழகு உணர்வுகளையும் (Aesthatics of Invisible movement) ஓவியங்களாகவும் வரைபடங்களாகவும் பதிவிட விரும்பினேன்.

வாழ்வின் இயக்கத்தின் யதார்த்தமான உண்மை என்னவென்றால் நம்மிடையே நடக்கும் பல பரிணாமங்கள் கொண்ட ஒவ்வோர் அசைவும், நகர்வும், மன அதிர்வுகளும் (Physical & Psychological Reality) தான். பிரபஞ்சத்தின் இயக்கத்துடன் இதை உள்வாங்கி பார்ப்போமானால் நமது திட மற்றும் இயற்பியல் தன்மையும் அதன் இயக்கமும் ஒரு கேள்விக்குறியாக்கப்படும். நம் ஒவ்வொருவருடைய பரிணாம வளர்ச்சியும் இதற்கிடையில் பலவிதமான பரிணாமங்கள் கொண்ட கண்ணுக்குப் புலப்படாத நகர்கின்ற அதிர்வுகளான சக்தி வாய்ந்த வரைபடங்கள் வெளிபாடுகளாக ஆகின்றன.

ஒவ்வொரு மணித்துளியும் இந்தவிதமான பல கோடிக்கணக்கான வரைபடங்கள் இயற்கையின் வனப்பில் உருவாகி, இந்தப் பிரபஞ்சவெளியில் கலக்கின்றன. இந்தவித கண்ணுக்குப் புலப்படாத ஒவ்வொரு வரைபடங்களும் ஏற்கனவே சொல்லப்பட்ட எந்தவித அழகியல் தன்மையும் கொண்டது அல்ல. இந்த வரைபடங்கள் புதிய பரிணாமங்கள் கொண்டதாகவும் அழகியலில், புதிய சேர்க்கையாகவும் நேர்த்தியான காலம் - இடம் - வெளி – அதன் உயிர்த்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் இருக்கும். இதை அடிப்படையாகக்கொண்டு பல ஆயிரக்கணக்கான சிறு வரைகோடுகளை எனது சித்திரப் புத்தகத்தில் (Random Movements) பதிவிட்டுள்ளேன். இவை அனைத்தும் சுதந்திரத் தன்மையுடன் உணர்வுபூர்வமாக வரையப்பட்டதினால் அதன் அழகுணர்வுகள் ஒவ்வொரு மணித்துளியிலும் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. நானும் பல நேரங்களில் நான் சித்திரித்த, உணர்வுபூர்வமான சுதந்திரமான வரி வடிவங்களை, நானே வேறு ஒரு மனிதனாக ரசித்ததும் அவற்றின் அழகுணர்வுகளை வேறு ஒரு பரிணாமங்களில், பரிமாணங்களிலும் செய்தது உண்டு.

உங்கள் படைப்புகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்... இதற்கான விளக்கம்?

பகுதி 1 - வளர்ப்பும் வண்ணங்களும்...

தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்...

.

கட்டுரையாளர் குறிப்பு:

வைஷ்ணவி ராமநாதன்

Curator மற்றும் கலை எழுத்தாளர். சென்னையிலும் பெங்களூரில் உள்ள சித்ர கலா பரிஷத்தில் நுண்கலை படித்தவர். இப்பொழுது சென்னை அரசு நுண்கலைக் கல்லூரியில் பகுதி நேர Art History ஆசிரியராக இருக்கிறார். மின்னம்பலத்தின் வெளியீடான 'உருவங்கள் உரையாடல்கள்' நூலின் ஆசிரியர்.

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 13 ஜன 2022