கிச்சன் கீர்த்தனா: மட்டன் ஆம்லெட் புலாவ்


ஒரு விருந்து, ஒரு கொண்டாட்டம், ‘செலிபிரேஷன் மூட்’ என்றால், வெஜ் உணவுகளோடு சேர்த்து நான்-வெஜ் உணவுகளும் இருந்தால், கூடுதல் களைகட்டும்தானே. அதை இந்த மட்டன் ஆம்லெட் புலாவ் மூலம் நிறைவேற்றலாம்.
ஆம்லெட் செய்ய:
முட்டை - 6
மட்டன் கீமா - அரை கப்
பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாயத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பாஸ்மதி அரிசி - ஒன்றரை கப்
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மீடியமாக நறுக்கிய தக்காளி - 2
ஏலக்காய் - 2
பட்டை - ஒரு துண்டு
அன்னாசிப்பூ - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
புதினா இலை - சிறிதளவு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - ஒரு கப்
பிரிஞ்சி இலை - ஒன்று
சீரகம் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மட்டனை கீமா செய்வதற்கு ஏற்ப கொத்தி வாங்கி வைத்துக் கொள்ளவும். மட்டன் கீமாவாக ரெசிப்பியை ரெடி செய்து கொள்ளுங்கள். வெங்காயம், ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும். பாஸ்மதி அரிசியைக் கழுவி சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
முட்டையை உடைத்து, வாய் அகலமான பாத்திரத்தில் சேர்த்து, எக் பீட்டரால் நன்கு அடித்துக்கொள்ளவும். இத்துடன் வெங்காயம், மட்டன் கீமா, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அடுப்பில் நான்ஸ்டிக் பேனை வைத்து சிறிது எண்ணெய் தடவி சூடானதும், கலந்து வைத்துள்ள முட்டைக்கலவையை ஊற்றி வேகவிடவும்.
இனி பேனின் மேல் ஒரு தட்டையான தட்டை வைத்து மூடி, அப்படியே பேனை கவிழ்த்தவும். மறுபடியும் பேனை அடுப்பில் வைத்து தட்டில் உள்ள ஆம்லெட்டை மெதுவாக பேனுக்கு மாற்றவும். வேகாத அடிப்பக்கத்தை பேனில் வேகவிட்டு எடுத்து ஆறவிட்டு மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் பச்சை மிளகாய், புதினா இலை சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, அரைத்த வெங்காயக் கலவை விழுது, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு சேர்த்து வதக்கவும். கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும்போது நறுக்கி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து மெதுவாகக் கிளறிவிடவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். கூடவே ஊறவைத்த அரிசி சேர்த்து நன்கு கிளறி குக்கரை மூடவும். பிறகு மிதமான தீயில் 20 நிமிடம் ‘தம்’ போட்டு இறக்கவும். சூடு ஆறியதும், அலங்கரித்து ஆனியன் ரைத்தாவுடன் பரிமாறவும்.