சிறப்புக் கட்டுரை: தங்கம் நம்மைச் சுண்டியிழுக்கும் மந்திரப் பொருளானது எப்படி? பகுதி – 7

public

> பாஸ்கர் செல்வராஜ்

பணம் என்பது எல்லா பொருட்களின் மதிப்பை அளக்கவும், பரிமாற்ற ஊடகமாகவும் பயன்படும் சரக்கு (தங்கம், வெள்ளி, தாமிரம்). எல்லா பொருட்களின் மதிப்பும் இதைக் கொண்டு தெரிவிக்கப்படும். காகிதப்பணம் தோன்றி, பயன்பாட்டுக்கு வராத காலத்தில் தங்கம், வெள்ளி, தாமிரம் போன்ற உலோகங்களாலான நாணயங்கள் பணமாகச் செயல்பட்டன. உற்பத்தி மற்றும் சமூக வளர்ச்சியின் போக்கில் அதிக மதிப்பையும் ஒப்பீட்டளவில் வீழ்ச்சியடையாத மதிப்பையும் கொண்ட தங்கம், எல்லா பொருட்களின் மதிப்பை அளக்கும் அளவீடாகவும், பரிமாற்ற ஊடகமாகவும் ஒரு சமூகத்தால் அங்கீகரிக்கப்படுகிறது.

**சுற்றுச்சூழலும் செல்வத்தை எட்டிப்பிடிக்க அலையும் மனம்!**
எல்லோரும் உலோகங்களான காசுகளைப் பெற்றுக்கொண்டு பொருளைப் பரிமாறிக்கொள்ளும்போது மக்களுக்கு இடையில் நடைபெறும் பொருட்களின் பரிவர்த்தனை சுழற்சி வேகமெடுக்கிறது. சரக்கு – பணம் – சரக்கு என்ற சுழற்சியில் பொருட்கள் மக்களின் பயன்பாட்டுக்குச் சென்று மறைந்து விடுகிறது. இந்தச் சுழற்சியின் பரிவர்த்தனை ஊடகமான தங்கம் (பணம்), நம் கண்களின் முன்னால் மறையாமல் தொடர்ந்து மின்னுவதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. நம் கண்முன் இருந்து மறைந்து மாறும் பொருளை விடுத்து மாறாத அந்த மின்னும் பொன்னை அடையும் வேட்கையை அனைவரிடமும் ஏற்படுத்துகிறது. மக்களுக்கு இடையில் நடக்கும் பரிவர்த்தனையின் மையமாகத் திகழும் வணிகர்கள், இந்த மின்னும் பொன்னை கைக்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த சுழன்று விளையாடும் மின்னலைச் சுழற்றி விளையாடும் வித்தையை கைகொண்ட வித்தகர்கள் ஆகிறார்கள். தேவைக்கும், அளிப்புக்கும் ஏற்ப பொருட்களின் விலையை ஏற்றி இறக்கி விளையாடும் வித்தை தெரிந்த இவர்கள் மக்களின் கையில் இருக்கும் தங்களின் தேவைக்குப் போக எஞ்சி இருக்கும் உபரியை தங்களிடம் குவிக்கிறார்கள்.
மின்னும் பொன்னைப் பிடித்து வைக்க முனைவதன் காரணம் அதன் மதிப்பு அதிகமானதும் ஒப்பீட்டளவில் மாறாததும் மட்டுமல்ல; பரிவர்த்தனை மதிப்பின் (Exchange Value) உருவமாகவும் அது இருப்பதால்தான். ஒரு வீடு வாங்குகிறோம். அதில் வசித்து வாழ்ந்து இன்புறும்போது அதன் பயன்மதிப்பை (Use Value) பெறுகிறோம். அந்த வீடு நகரின் முக்கிய பகுதியில் இருந்தால் வாழ வசதியானது, வணிகம் செய்ய உகந்தது என்ற பயன்மதிப்பின் காரணமாக அதை அதிக விலைக்கு மற்றவரிடம் பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற வகையில் அதிக மதிப்பு கொண்டது கூறிக் கொள்ளலாம். அந்த வீட்டில் வாழ்ந்து பயன்மதிப்பை உணரும் அதேவேளை, இந்தச் சொத்தின் பரிமாற்ற மதிப்பை அதை மற்றவருக்கு விற்று பணமாகக் காணும்போதுதான் இந்த மதிப்பைக் கண்டுணர முடிகிறது. அதுவரையிலும் காணமுடியாத பரிமாற்ற மதிப்பைக் கண்முன்னால் உண்மை உருவமாகப் பணம் (தங்கம்) நிறுத்துவதாலும், அதைக் கொண்டு நினைத்த மாத்திரத்தில் எந்த பொருளையும் வாங்க முடியும் என்ற யதார்த்தத்தாலும், அது எப்போதும் கைநழுவிச் சென்று மறையும் மின்னல் ஊடகமாக இருப்பதாலும் அதைக் கைப்பற்றி வைத்துக் கொள்ளும் வேட்கையை நம்மிடம் ஏற்படுத்துகிறது.

**பல பரிமாணங்களைப் பெறும் பணம்!**
இப்படி மின்னலைப்போல சுற்றிச்சுழலும் தங்கத்தைக் குவித்து (Hoard) ஒரு பெட்டியில் பதுக்கும்போது அது பொருளாதாரத்தில் பாய்ச்சி வந்த ஒளியை மங்கச்செய்து தேக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களிடம் இருக்கும் அவர்களின் தேவைக்குப்போக எஞ்சிய பரிவர்த்தனைக்கான பொருளின் அளவை வேகமாக அருகச் செய்கிறது. காலப்போக்கில் மக்கள் தமக்குத் தேவையான பொருள் நுகர்வுக்குக்கூட கடன் வாங்குவதை நோக்கி நகர்த்துகிறது. தங்கத்தைக் குவித்து வைத்திருக்கும் வணிக வித்தகர்கள் இவர்களுக்குக் கடன் கொடுக்கிறார்கள். இந்த கடன் எப்படி எப்போது திருப்பி தரப்படும்? எதிர்காலத்தில் விளைந்து அறுவடையாகப்போகும் விளைச்சல் அல்லது இப்போது உற்பத்தியாகி எதிர்காலத்தில் விற்பனையாகப்போகும் பொருள் மூலமாக வரும் லாபத்தின் (உபரி) மூலமும், இந்த உற்பத்தியில் ஈடுபட்டு வேலைசெய்து பெறும் கூலியின் மூலமும். இது தற்காலிகமாக பரிவர்த்தனையில் ஏற்பட்டு இருக்கும் தேக்கத்தை உடைத்துச் சுழல செய்யும் அதேவேளை எதிர்கால பரிவர்த்தனையை இல்லாமல் ஆக்கி, செல்வத்தை ஒரு சிலரிடம் கொண்டுபோய் மேலும் மேலும் குவிக்கிறது.
தங்கத்தை (பணத்தை)க் குவித்து வைத்திருப்பவர்கள் தங்கத்தைக் கடனாகக் கொடுத்து மேலும் தமது செல்வத்தைக் குவிக்க முற்படுகிறார்கள். தங்கத்தால் ஈர்க்கப்பட்டு அதை அடைய ஏங்குபவர்கள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பி அடைக்க, தங்கத்தை ஈட்ட முற்படுகிறார்கள். இவர்களிடம் வரி அறவிடும் அரசும் தமக்கான வருவாயைப் பணமாக (தங்கமாக)க் கொடுக்க கோருகிறது. இப்போது பணம் என்பது பொருட்களின் மதிப்பை அளக்கும் அளவுகோலாகவும், பரிமாற்ற ஊடகமாகவும் மட்டும் இல்லாமல் செல்வத்தைக் குவிக்கவும் (Hoard), கடனைத் திருப்பி கொடுக்கவும் வரியைக் கட்டுவதற்குமான கருவியாக அதாவது கொடுப்பனவாக (Means of payment) மாறுகிறது. இந்தச் சுழற்சி மாற்றங்களின்போது ஒவ்வொரு பொருளும் இத்தனை தங்கக்காசுகள் என்று சொல்வது நடைமுறை ஆகிறது. ஒவ்வொரு பொருளின் மீதும் எழுதப்படும் எண்களைப் பார்த்து இதன் விலை இவ்வளவு என்று நாம் அறிந்துகொள்கிறோம். ஆனால் அதன் உண்மைப் பொருள் என்ன?


**பணத்தின் பாத்திரத்தை மறக்கும் மக்கள்!**
இந்தப் பொருள் தங்கத்தைப்போல இவ்வளவு மதிப்புடையது; இந்த மதிப்புக்கு இணையான இத்தனை தங்கக்காசுகளைக் கொடுத்து இந்தப் பொருளை வாங்கிக் கொள்ளலாம் என்பது. உதாரணத்துக்கு…
5 கிராம் தங்கம் = 1 தங்கக்காசு (பகோடா)
50 கிராம் வெள்ளி = 1 வெள்ளிக்காசு (சிலிகுவா)
500 கிராம் செம்பு = 1 செம்புக்காசு (தினார்)
1 தங்கக்காசு = 5 வெள்ளிக்காசுகள் அல்லது 50 செம்புக்காசுகள்
எனப் பணம் உருவாக்கப்பட்டு புழக்கத்தில் இருப்பதாகக் கொள்வோம். ஒருவர் தனது குதிரையை ஐம்பது தங்கக்காசுகள் எனச் சந்தையில் அறிவிக்கிறார் மற்றவர் விலைபேசி 1,500 வெள்ளிக்காசுகளுக்கு வாங்குகிறார் என்றால் அந்தக் குதிரையின் மதிப்பு 30 தங்கக்காசுகளாக தனது மதிப்பை எய்துகிறது. இதன்படி 5 கிராம் அளவுள்ள தங்கக்காசின் மதிப்புடன் ஒப்பிடும்போது இந்த குதிரை 30 மடங்கு மதிப்பு வாய்ந்தது.
ஆரம்பத்தில் மதிப்பை ஒப்பிட்டு அதற்கு இணையான காசுகளைக் கொடுத்துப் பரிமாறிக்கொள்வது, பின்பு இது சமூகத்தின் நடைமுறையான பிறகு காலப்போக்கில் இப்படி ஒப்பிட்டுப் பார்ப்பது மறைந்துவிடுகிறது. இப்போது ஒரு குதிரையின் மீது 30 தங்கக்காசுகள் என எழுதி இருந்தால் அதை, கண்கள் பார்த்தவுடன் மூளை இதன் விலை இவ்வளவு என அறிந்து கொள்கிறதே ஒழிய இது தங்கத்துடன் ஒப்பிடும்போது இவ்வளவு என என்பதை மறந்து விடுகிறது அல்லது சொல்லாமல் மறக்கடிக்கச் செய்கிறார்கள். ஒவ்வொரு பொருளையும் இத்தனை கிராம், கிலோ எனச் சொல்லும்போது இதன் நிறை இரும்பின் நிறையுடன் ஒப்பிடும்போது இவ்வளவு நிறை கொண்டது என்பதை மறந்து எப்படி வெறும் எண்களாக பழக்கத்தில் புரிந்துகொள்ளப்படுகிறதோ அதைப்போல. இந்த மறதி, பணத்தை அதாவது தங்கக்காசுகளை உருவாக்கி பழக்கத்துக்குக் கொண்டுவரும் அரசும், வணிகர்களும் மதிப்பு முறையை மாற்றி செல்வத்தை உறிஞ்சிக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.

**பயன்படுத்திக் கொள்ளும் ஆளும்வர்க்கம்!**
உதாரணமாக…
1 தங்கக்காசு = 5 கிராம் தங்கம்
ஒரு பொருள் = 30 தங்கக்காசுகள்
என்று நடந்து கொண்டிருக்கும் பரிவர்த்தனையின்போது காசுகளை அச்சிட்டு வெளியிடும் அரசு திருட்டுத்தனமாக தங்கக்காசின் அளவை 4.5 கிராமாக குறைத்துவிட்டதாகக் (Debasement) கொள்வோம். இப்போது 500 கிராம் தங்கத்தைக் கொண்டு 50 தங்கக்காசுகளுக்கு பதிலாக 55 தங்கக்காசுகளை அரசு உருவாக்குகிறது. இந்தக் காசுகளைக் கொண்டு 55 தங்கக்காசுகள் பெறுமான பொருளையும் சேவையையும் பெற்றுக்கொண்டு புழக்கத்தில் விடும். தங்களின் உற்பத்திக்கும், உழைப்புக்கும் குறைவான மதிப்புடைய பணத்தை பெறும் உற்பத்தியாளர்களும், உழைப்பாளர்களும் இந்தக் காசுகளைக் கொண்டு பொருளை வாங்கும்போதும் கடனைத் திருப்பி கொடுக்கும்போதும் இந்த மதிப்பு குறைவை சரிசெய்ய வணிகர்கள் பொருட்களின் விலையை அதிகரித்தும், கடனுக்கான வட்டியை அதிகரித்தும் ஈடுகட்ட முனைவார்கள் (இது இல்லாத காலங்களிலும் இதைச் செய்வது அவர்களின் இயல்பு). இப்போது உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் அதிக பொருளை உற்பத்தி செய்தும், அதிக நேரம் வேலை செய்தும் பணத்தை ஈட்ட நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
இப்படி பொருட்களின் விலையைக் கூட்டியும், கடனுக்கான வட்டியை அரசுக்கான வரியை கூட்டியும், மதிப்பிடும் முறையையே குலைத்தும் செல்வத்தைக் குவிக்க உதவும் கருவியாக பணம் மாறுகிறது. இப்படி உற்பத்தியாளர்களையும் உழைப்பாளர்களையும் ஒட்ட சுரண்டும்போது அவர்களின் உற்பத்தித்திறனும், பரிவர்த்தனையில் ஈடுபட்டு பொருட்களை வாங்கி நுகரும்திறனும் குறைகிறது. ஆரம்பத்தில் பரிவர்த்தனையை வேகப்படுத்தி சுழற்சியைக் கூட்டிய தங்கம் (பணம்) பின்பு பரிவர்த்தனையை சுணங்கச் செய்யும் காரணியாகிறது. இப்படியான சுணக்கத்தைப் போக்க இவர்களுக்குக் கடன் கொடுத்து பொருட்களை நுகர செய்வது எதிர்கால பரிவர்த்தனையை, நுகர்வை இல்லாமல் ஆக்கி சுணக்கத்துக்கு பதிலாக மேலும் அதிக சுணக்கத்தை ஏற்படுத்தும் வழிமுறையை பதிலாக முன் தள்ளப்படுகிறது. இறுதியில் அது பொருளாதார நெருக்கடியில் (Economic Crisis) சென்று முடிகிறது.


**நமது சமூகத்தில் பதுக்கலாகவே நின்றுபோன பணம்!**

முன்னேறிய உற்பத்தி கொண்ட ஐரோப்பிய நாடுகளில் பணம் இப்படி உருவாகி பல பரிமாணங்களைப் பெறும் அதேவேளை, மரபான உற்பத்தியையும் மிகக் குறைவான அளிப்பையும் தேவையும் கொண்டிருந்த இந்தியா போன்ற நாடுகளில் அறிமுகம் ஆகும்போது வெள்ளி மற்றும் தங்கத்தாலான பணத்தின் தனிச்சிறப்பின் காரணமாக இந்த சமூகங்களில் அதை வைத்திருப்பது ஒருவரின் செல்வ செழிப்பின் அடையாளமாக மாறுகிறது. இதைக் குவித்து (Hoarding) பதுக்கும் வெகுளித்தனமான ஆர்வத்தை இந்த மக்களிடம் தூண்டுகிறது என்கிறார் மார்க்ஸ். மற்றவர்களுக்கு தங்கமும் வெள்ளியும் பணம், பரிமாற்ற ஊடகம், செல்வத்தைக் குவிக்கவும், கடனையும் வரியையும் கட்டுவதற்கான கருவி. நமக்கோ வெறும் செல்வச்செழிப்பின் அடையாளம். அதைத் தாண்டி இதற்கு இங்கே எந்த பயனும் இல்லை.
இதைக் குவித்து வைத்துக்கொண்டு நகையாக கையில், காதில், மூக்கில் இடுப்பில் மாட்டிக்கொண்டு, வீட்டில் வெள்ளி, தங்கத்தாலான பொருட்களாக செய்து வைத்துக் கொண்டு சமூகத்தின் முன் தனது செல்வச்செழிப்பைக் காட்டி திரிந்து கொண்டிருக்கிறோம். இந்தியாவில் உள்ளவர்கள் இதைப் பார்த்து இவ்வளவு பெரிய பணக்காரரா என வாய் பிளக்கிறார்கள். இப்படி தங்கத்தை உடலெங்கும் மாட்டிக்கொண்டு வெளிநாடுகளில் திரியும் இந்தியர்களைப் பார்க்கும் அமெரிக்க-ஐரோப்பியர்கள் ஓர் ஏளன சிரிப்புடன் பழங்குடிகளின் பழக்கவழக்கம் என்பதாகப் பார்த்து கடந்து செல்கிறார்கள். ஏன் இது நம்மிடம் பணமாக, பரிமாற்ற ஊடகமாக இருக்கவில்லை என வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ரோமர்களுடனான நமது வர்த்தகத் தொடக்கம் அவர்களின் தேவைக்கு நாம் அளிப்பது என்பதாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய இருவரின் தேவைக்கும் பொருட்களை ஏற்றுமதி – இறக்குமதி செய்து கொள்வது என்பதாக இருந்திருக்கவில்லை.
அப்படி நம்மிடம் நுழையும் தங்க, வெள்ளிப் பணம் சமூகத்தில் எல்லோரிடமும் இல்லாத இந்த வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களிடம் மட்டுமே இருக்கும் சிறப்பு செல்வமும் தகுதியும். இதைக் கொண்டு வெளிநாட்டவர்களுடன் வர்த்தகம் செய்ய முடியும் அவர்களின் பொருளை வாங்கி நுகர முடியும் என்பதால் இதைத் தன்னிடம் குவித்துக் கொண்டு தனது தேவைக்கு போக எஞ்சியவற்றை தனது வாரிசுகளுக்குக் கொடுக்கிறார்கள். நமது தொடக்கமே இப்படித்தான் இருந்திருக்கிறது என்பதை முந்தைய பரிவர்த்தனை வளர்ச்சி குறித்த பகுதியில் கண்டோம். தங்கமும் வெள்ளியும் நம்மிடம் பணமாக மாறாமல் எவ்வளவு காலம் அது வெறும் செல்வத்தை பதுக்கவும் தமது செல்வச்செழிப்பை பறைசாற்றும் அணிகலன்களாகவும் நீடித்தது? எவ்வளவு காலம் இப்படி பதுக்கினோம் (தேங்கினோம்)?

தனது மூலதனம் நூலில் 1602இல் இருந்து 1734 வரை அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கும் பின்பு இந்தியாவுக்கும் வந்து இந்தியர்களால் குவிக்கப்பட்ட 150 மில்லியன் பவுண்டுகள் பெறுமான வெள்ளியை அவர்கள் இறந்தவர்களுடன் சேர்த்து புதைத்து விட்டார்கள் என வேண்டர்லின்ட்(Venderlint) என்பவரின் கூற்றை ஆதாரமாகக் கொண்டு சுட்டிக் காட்டுகிறார் மார்க்ஸ். அப்படி என்றால் அதுவரையிலும் ஆட்சி செய்பவருக்கு நிலம் சொந்தம்; உயிர்வாழ உழவர்கள் அதை உழுது உண்பது; அந்த உற்பத்திக்கு சேவையாக தமது உழைப்பைச் செலுத்தும் மற்றவர்கள் அவர்களை சார்ந்து வாழ்வது; உபரியை நிலத்தின் உடைமையாளர் எடுத்துக் கொள்வது; அவர்கள் அந்த உபரியைக் கொண்டு மற்ற நாடுகளுடன் பரிவர்த்தனையில் ஈடுபடுவது என்ற பார்ப்பனிய பொருளாதார சாரத்தில் மாற்றமின்றியும் கைத்தொழில்களின் வளர்ச்சி முடக்கப்பட்டு உழைப்பின் வளர்ச்சியின்றியும் நமது சமூகம் தேங்கி நின்றதா என்றால் அப்படி சொல்லிவிட முடியாது என்கிறார் வரலாற்று ஆய்வறிஞரும் பேராசிரியருமான இர்பான் ஹபிப்.
முகலாயர்களின் ஆட்சியில் பணப்புழக்கம் அதிகமாக இருந்தது மட்டுமல்ல; நில வாடகை பணமாகவும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. மார்க்ஸ் சொல்லும் ஆசிய சொத்துடைமை பொருளாதாரத்தில் இது எப்படி சாத்தியம் என்பதை இந்தியப் பொருளியல் ஆய்வாளர்கள் விளக்க வேண்டும் என்கிறார் அவர். இந்திய ரூபாயின் தோற்றமும் அதன் பிரச்சினைகளும் என்ற நூலில் ரூபாயின் வளர்ச்சியை வரலாற்றுபூர்வமாக ஆய்வு செய்யும் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞரான அம்பேத்கரும் முகலாயர்களிடம் இருந்தே தொடங்குகிறார். அவர்களிடம் வளர்ச்சியடைந்த மேம்பட்ட பணமுறை (காசுகள்) மற்றும் கடன்முறை இருந்தது என அந்த நூலில் கூறுகிறார். முகலாயர்கள் மட்டுமா? வடக்கில் உருவான குப்த பேரரசும் சரி தெற்கில் உருவான களப்பிரர்கள், சோழ, பாண்டியர்களும் செம்பு, வெள்ளி, தங்கக்காசுகளை வெளியிட்டு இருக்கிறார்களே… இவற்றை எல்லாம் எப்படி புரிந்துகொள்வது?

**நாளை காலை 7 மணி பதிப்பில் பார்க்கலாம்**

** [பகுதி 1](https://minnambalam.com/politics/2022/02/05/5/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India) / [பகுதி 2](https://minnambalam.com/politics/2022/02/06/1/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India) / [பகுதி 3](https://minnambalam.com/politics/2022/02/07/2/US-Afganisthan-issues-and-dollar-shanges-effect-in-India) / [பகுதி 4](https://www.minnambalam.com/politics/2022/02/08/9/TamilNadu-barter-system-and-stagnation) / [பகுதி 5](https://www.minnambalam.com/politics/2022/02/09/8/broken-Brahmanism-and-unbroken-caste-based-community) / [பகுதி 6](https://www.minnambalam.com/public/2022/02/22/7/what-is-money)**

**கட்டுரையாளர் குறிப்பு**

**பாஸ்கர் செல்வராஜ்**, தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *