உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

நெட்பிளிக்ஸில் வெளியாகும் படங்கள், தொடர்கள் குறித்து அதன் ஊழியர்களுக்கு உடன்பாடு இல்லையென்றால் அவர்கள் ஸ்ட்ரீமிங் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.
2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2 லட்சம் சந்தாதாரர்களின் இழப்பை கண்டது நெட்பிளிக்ஸ். அதன் காரணமாக பங்கு சந்தையில் 20 சதவீதம் வீழ்ச்சி கண்டது. இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெட்பிளிக்ஸ் அதன் கலாச்சார வழிகாட்டுதல்களைப் புதுப்பித்து, "கலை வெளிப்பாடு" என்ற புதிய பகுதியை சேர்த்துள்ளது, இது பல பார்வையாளர்களுக்கு எவ்வாறு படங்களையும், தொடர்களையும் வழங்குகிறது என்பதை விவரிக்கிறது. மேலும் வருங்கால ஊழியர்கள் எங்கள் நிலையை புரிந்து அவர்களுக்கு நெட்பிளிக்ஸ் சரியான நிறுவனமா என்பது குறித்து சிறந்த முடிவுகளை எடுக்க முடியும். பார்வையாளர்களுக்கு எது பொருத்தமானது என்பதைத் அவர்களே தீர்மானிக்க நாங்கள் அனுமதிக்கிறோம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
எலான் மஸ்க் ட்விட்டரை அவர் வாங்கி அதில் சில செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவந்தபோது இதேபோலத்தான் நிறுவனத்துக்கு உள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. நெட்பிளிக்ஸின் புதிய மாற்றங்களுக்கு உடன்பாடு இல்லாதவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறலாம் என்று அந்த நிறுவனம் அறிவித்ததற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நெட்பிளிக்ஸில் உலகளாவிய பயனர் எண்ணிக்கை குறைந்து வருவதால், நெட்பிளிக்ஸ் அதன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் விளம்பரங்களைக் கொண்டு வருவதற்கான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. ஸ்ட்ரீமிங் தளத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் விளம்பரங்கள் கொண்டுவரப்படும். மேலும் கடவுச்சொற்களை பகிர்வதை தடுக்கும் புதிய நடவடிக்கைகளை நிறுவனம் விரைவில் அறிவிக்கும். மேலும் இந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் மட்டும் 20 லட்சம் ரூபாய் இழப்பை நெட்பிளிக்ஸ் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.