மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 17 மே 2022

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

சர்ச்சைகளுக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாதவர் நித்யானந்தா. இவருக்குப் பல நாடுகளிலும் சீடர்கள் உள்ளனர். பாலியல், கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கித் தலைமறைவாக இருக்கிறார். இருந்தாலும் பல ஐபிகள் மூலம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் தற்போது வரை எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால், கைலாசா எனும் தீவு நாட்டில் இருப்பதாக அறிவித்தார். இந்தச்சூழலில் கடந்த வாரம் அவர் மரணமடைந்துவிட்டதாகச் செய்திகள் பரவின. இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் திரும்பி வந்துட்டேனு சொல்லு என ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டார்.

இந்தச்சூழலில் மீண்டும் அவர் நேற்றிரவு வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி. அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளன. புற்று நோய், ட்டியூமர் இல்லை. இதயப் பிரச்சனைகள் எதுவும் இல்லை. 18 வயது இளைஞனுக்கு இருப்பது போல் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது. கொழுப்பு கல்லீரல் இல்லை. இரத்த அழுத்தம் இல்லை, சர்க்கரை நோய் இல்லை. அதிக கொலஸ்ட்ரால் இல்லை. சிறுநீரகம், நுரையீரல் சரியாகச் செயல்படுகின்றன. ஆட்டோ இம்யூன் நோய்கள் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கின்றன. எம்ஆர்ஐ உட்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.

ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் என்னால் உணவு உண்ண முடியவில்லை. அப்படியே சாப்பிட்டாலும் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. அதுபோன்று உறக்கமும் இல்லை. நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடைபெறவில்லை.

6 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இப்படி நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனது உடல் வழக்கம். எனவே சீடர்கள் என் உடல்நிலை பற்றி கவலைப்படத் தேவையில்லை. எனது கிரகங்களும், அனைத்து கோள்களும் எனக்குச் சாதமாகத்தான் இருக்கிறது. எனவே எனக்கு இப்போது மரணமோ விதேக சமாதியோ ஏற்படாது.

தற்போது கைலாசாவில் சிறிய விமான நிலையம் இருக்கிறது. ஆனால் பெரிய மருத்துவமனைகள் இல்லை. எனவே எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் மருத்துவ இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலைக் கவனித்துக் கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாகக் கொடுத்துவிட்டீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேற வெறுப்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர் நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற குறிப்பையும் வெளியிட்டுள்ளார்.

-பிரியா

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது? ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சளி பிடித்திருக்கும்போது ஏற்ற உணவுகள் எது?

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

புதிய உச்சத்தில் முட்டை விலை: காரணம் என்ன?

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!

செவ்வாய் 17 மே 2022