ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்குத்தான் பெட்ரோல்!

அசாமில் கனமழை பெய்து வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பதால் திரிபுரா மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களுடனான ரயில் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் சேதம் ஏற்பட்டு, வாகன போக்குவரத்து முடங்கியது. இருப்பினும், அசாம் வழியாக தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்களை, குறிப்பாக அரிசி மற்றும் கோதுமை போன்ற உண்ணக்கூடிய பொருட்களை திரிபுராவுக்கு கொண்டு வர அதிகாரிகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, திரிபுராவின் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் துறை எரிபொருள் வாங்குவதற்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. சமீபத்திய அரசு உத்தரவின்படி, தற்போது இருசக்கர வாகன உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு 200 ரூபாய் மதிப்பிலான எரிபொருளை பெற முடியும், நான்கு சக்கர வாகன உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் வரை பெட்ரோல் அல்லது டீசல் பெறமுடியும்.
இது குறித்து செய்திலார்களிடம் பேசிய உணவு மற்றும் சிவில் துறை கூடுதல் செயலாளர் தபன் குமார் தாஸ், “திரிபுராவில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கு பற்றாக்குறை இல்லை ஆனால் ரயில் சேவைகள் நீண்ட காலத்திற்கு நிறுத்தப்பட்டால், முன்னெச்சரிக்கையாக இந்த கட்டப்படுகள் செயல்படுத்தப்படுகிறது. வடகிழக்கு எல்லை ரயில்வே ஏற்கனவே திரிபுரா, தெற்கு அஸ்ஸாம், மணிப்பூர் மற்றும் மிசோரம் ஆகிய இடங்களுக்கு ரயில் சேவைகளை மே 25 வரை நிறுத்தியுள்ளது. அசாமின் மைபோங் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு போன்ற சூழ்நிலை காரணமாக ஏழு நீண்ட தூர பயணிகள் ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். கூடிய விரைவில் இது சரி படுத்தப்படும்.” என்று தெரிவித்தார்.