கடலூரில் காவலர் தற்கொலை!

public

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த சேந்திரகிள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. 2017 இல் தமிழக காவல் துறையில் பணியில் சேர்ந்தார். கடலூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார்.

தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சிதம்பரம் தில்லை நகர்ப் பகுதியில் வினாத்தாள்கள் வைக்கப்பட்டிருந்த வீனஸ் மெட்ரிகுலேஷன் தனியார்ப் பள்ளியில் அவருக்குப் பாதுகாப்புப் பணி போடப்பட்டிருந்தது.

நான்கு மணி நேரம் டியூட்டி என்ற அடிப்படையில் பெரியசாமி உட்பட மூன்று காவலர்கள் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு டியூட்டியில் ஈடுபடும் போலீசார்கள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து அதிக நேரம் வேலை பார்த்து வந்தனர்.

அதன்படி நேற்று மே 17ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பெரியசாமி பாதுகாப்பு பணிக்குச் சென்றார். இரவு முழுவதும் பணியில் ஈடுபட்ட அவர் இன்று அதிகாலையில், பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 303 ரைபிள் வகை துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார். இதில் தோட்டா அவரது கழுத்தை துளைத்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து பெரியசாமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

வினாத்தாள் பாதுகாப்புப் பணிக்காகச் சென்ற போலீசார் தற்கொலை செய்து கொண்டது சக போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீசார் சிலரிடம் விசாரித்தபோது, “தற்கொலை செய்து கொண்ட காவலர் பெரியசாமி இரவு முழுவதும் செல்போனில் டென்ஷனாகவே பேசிக்கொண்டு இருந்திருக்கிறார். இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்னும் 26 நாட்களில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல கடந்த ஆண்டு அவரது தங்கையும் தற்கொலை செய்து கொண்டார். பெரியசாமி தற்கொலை குறித்து விசாரணை நடந்து வருகிறது. போலீசார் சிலர் மன அழுத்தத்திலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் தேவை” என்கிறார்கள்.

**-வணங்காமுடி**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *