அரசுக்குப் பெரும்பான்மை இல்லையா? குட்கா வழக்கில் இறுதி விசாரணை!

politics

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை தொடங்கியது.

சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டுவந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2017ஆம் ஆண்டு உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்து நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்தார் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா. இடைக்காலத் தடையை நீக்க வேண்டுமெனவும், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும் சட்டமன்றச் செயலாளர், உரிமை மீறல் குழு தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இரண்டு வழக்குகளின் விசாரணையும் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா முன்பு நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர்.இளங்கோ ஆகியோர் ஆஜராகினர். சட்டமன்றச் செயலாளர் தரப்பில் அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி வாதிட்டார்.

திமுக தரப்பில், “சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் குட்கா பொருளை உட்கொள்ளவில்லை. குட்கா பொருட்கள் விற்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக பேச்சுரிமை அடிப்படையில் சட்டமன்றத்துக்குக் கொண்டு சென்றனர்” என்று சுட்டிக்காட்டினர்.

முதல்வரை மாற்றக்கோரி தினகரனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரிடம் மனு அளித்ததாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்ததாகவும் தெரிவித்த திமுக தரப்பு, “அரசின் பெரும்பான்மைக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்ததால்தான் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பப்பட்டது” என்ற வாதத்தை முன்வைத்தது.

ஆனால் சட்டமன்றச் செயலாளர் தரப்பிலோ, சட்டத்தால் தடை செய்யப்பட்ட எதையும் ஒரு எம்.எல்.ஏ அவைக்குக் கொண்டு வரக் கூடாது எனவும் பேச்சுரிமைக்காகத்தான் கொண்டு வந்தோம் எனக் கூறக் கூடாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

உரிமைக்குழு முன்பு விளக்கமளிக்க வாய்ப்புள்ள நிலையில், தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்க வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்த சட்டமன்றச் செயலாளர் தரப்பில், “தமிழக அரசுக்கு ஒருபோதும் பெரும்பான்மைக்குக் குறைந்ததில்லை. ஆகவே, பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்ளத்தான் உரிமை மீறல் பிரச்சினை கையில் எடுக்கப்பட்டது எனக் கூறுவது தவறானது” என விளக்கம் அளிக்கப்பட்டது. சட்டமன்ற நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் வாதிடப்பட்டது.

சட்டமன்றச் செயலாளர் தரப்பின் வாதங்கள் முடிவடையாததால் வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *