’என் புத்தகங்களை பரிசாக கொடுக்க வேண்டாம்’: தலைமை செயலாளர்!

politics

தன்னை மகிழ்விப்பதாக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக விநியோகிக்க வேண்டாம் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இறையன்பு, ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதைத் தாண்டி, புகழ் பெற்ற எழுத்தாளர் மற்றும் ஆங்கிலத்திலும் தமிழிலும் நல்ல பேச்சாளரும் கூட. இதுவரை 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அதில், தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய நூல்கள், ஐஏஎஸ் தேர்வுக்கான வழிகாட்டி நூல்கள் உள்ளிட்டவை மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றவை.

இந்நிலையில், தாம் எழுதிய நூல்களை வாங்க வேண்டாம் என தலைமை செயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்கு தெரிந்த தகவல்களை வைத்தும் என் அனுபவங்களை தொடுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றிலுள்ள பொருண்மை கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியிலே முத்தாக கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போது உள்ள பொறுப்பின் காரணமாக பள்ளி கல்வித்துறைக்கு நான் ஒரு மடல் எழுதி உள்ளேன். நான் எழுதியுள்ள நூல்களை எக்காரணம் கொண்டும் எந்த அழுத்தம் வர பெற்றாலும் தலைமை செயலராக பணியாற்றும் வரை எந்த திட்டத்தின் கீழும் வாங்க கூடாது என்கின்ற உத்தரவே அது. பார்ப்பவர்களுக்கு என் பணியின் காரணமாக அது திணிக்கப்பட்டு இருப்பதாக தோன்றி களங்கம் விளைவிக்கும் என்பதால் தான் இத்தகைய கடிதத்தை எழுதி இருக்கிறேன். எந்த வகையிலும் என் பெயரோ, பதவியோ தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதே எனது நோக்கம்.

அரசு விழாக்களில் பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்கள் வழங்கினால் நல்லது என்ற அரசாணை 2006 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது. அரசு விழாக்களில் அரசு அலுவலர்கள் யாரும் என்னை மகிழ்விப்பது ஆக எண்ணி என்னுடைய நூல்களை அரசு செலவிலோ, சொந்த செலவிலோ பரிசாக பூங்கொத்துக்கு பதில் விநியோகிக்க வேண்டாம் என்று அன்புடன் விண்ணப்பம் வைக்கிறேன். இவ்வேண்டுகோள் மீறப்பட்டால், அரசு செலவாக இருந்தால் தொடர்புடைய அதிகாரிகளிடம் அது வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்படும். சொந்த செலவு செய்வதையும் தவிர்ப்பது சிறந்தது . எனவே இத்தகைய சூழலை எக்காரணம் கொண்டும் ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *